பைசன்- விமர்சனம்

மாரிசெல்வராஜ் அளித்திருக்கும் மற்றொரு ஆழமான படைப்பு பைசன்
மணத்தி கணேசன் என்ற கபடி வீரர் சாதித்த கதையைச் சொல்கிறது பைசன். துருவ் விக்ரம் கபடி என்பதை உயிராக நினைத்து வாழ்கிறார். ஆனால் கபடிக்குப் பின்னாலுள்ள சாதி அரசியலும், சாதிய வன்மமும் தன் மகனை காவு வாங்கிவிடக் கூடாதென பயப்படுகிறார் தந்தையான பசுபதி. ஒரு கட்டத்தில் தடைகள் தயக்கங்கள் தாண்டி நடைபோடுகிறார் துருவ். இவர் வாழ்வில் லால் மற்றும் அமீர் இருவருக்குமான சாதி சண்டை என்ன ரோல்ப்ளே செய்கிறது என்பது மீதிக்கதை
தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரின் ஆழமுணர்ந்து கிட்டானாக வாழ்ந்துள்ளார் துருவ் விக்ரம். பசுபதி வழக்கம் போல் தன் இருப்பை ஆழமாக பதிய வைத்துள்ளார். அமீர் கொடுத்த கேரக்டரில் சரியான மீட்டரில் அசத்தியுள்ளார். லால் அழுத்தமான நடிப்பால் கவனம் பெறுகிறார். பெரிதும் எதிர்பார்த்த அனுபமா பரமேஸ்வரன் கேரக்டர் பெரிதாக எடுபடவில்லை. ரஜிதா விஜயன் சிறப்பாக நடித்துள்ளார். அருவி மதன் கச்சிதமான தேர்வு
நிவாஸ் கே பிரசன்னா நீண்ட நாட்களுக்குப் பிறகு அற்புதமான இசையை வழங்கியுள்ளார். பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பைசனுக்கு பெரிய எனர்ஜி. எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்தின் மைலேஜை ஏற்றுகிறது. அசத்தலான ப்ரேமிங், அற்புதமான லைட்டிங். ஆர்ட் டைரக்டரின் உழைப்பும் மெச்சத்தக்க ஒன்று
இருசாதியினரின் சண்டைக்குள் சிக்கும் ஒரு கபடி வீரன் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை நேர்த்தியாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ். எந்தச் சாதியினரையும் டார்கெட் செய்யாமல் நடுவில் நின்று இப்படைப்பை அணுகியுள்ளார். மேலும் நமக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், நம் அசைக்க முடியாத திறமை நம்மை உச்சத்தில் வைக்கும் என்று படத்தை முடித்திருப்பது சிறந்த ஒன்று
காளமாடன்- வெற்றி மாடன்
4/5