இசையமைப்பாளர் ஆனார் எம்.எல்.ஏ கருணாஸ்!
இன்று சமூக ஊடகங்களில் ‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ போன்றவை தகவல் தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த ‘வாட்ஸ்அப்’பை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் பெயர் ‘பகிரி’.
அதாவது ‘வாட்ஸ் அப்’ என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை எழுதி தயாரித்து இயக்குபவர் இசக்கி கார்வண்ணன்..
நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் ‘கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷர்வியா, இவர் ஆந்திர வரவு.
ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு வீரகுமார். இசை கருணாஸ் எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் இசையமைத்துள்ள முதல் படம் இதுவே. படத்தில் 3 பாடல்கள்.
படம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறும் போது, ” இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. பகிர்தல் தொடர்புடைய கதை. எனவே தான் ‘பகிரி’ என பெயர் வைத்தோம்.
தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை இது.
இப்போதைய சமூகச்சூழலில் இக்கால இளைஞர்கள் தங்களின் காதல் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், விருப்பம், வேலை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறேன். நான் பகிர வேண்டிய செய்தியையும் சிரிக்கச் சிரிக்க பகிர்ந்திருக்கிறேன்.” என்கிறார்.
படப்பிடிப்பு சென்னையில் மட்டுமல்ல, தாம்பரம், முடிச்சூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
35 நாட்களில் முழுப்படப்பிடிப்பையும் முடித்து வந்துள்ளது, படக்குழுவின் திட்டமிடலுக்கு ஒரு சான்றாகும்.
விரைவில் பாடல்கள் வெளியாகவுள்ளன.
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த ‘பகிரி’ படம் ஜூலை மாதம் வெளியாகும் விதத்தில் இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.