ஒரு இயக்குநருடன் மூன்று படங்கள்! : வெற்றியின் ரகசியம் சொல்லும் ராம்ஜி
சென்ற வாரம் ரிலீசான ‘தனி ஒருவன்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எந்தளவுக்கு படத்தில் திரைக்கதை பேசப்படுகிறதோ அதே அளவுக்கு பரவலாகப் பேசப்படும் இன்னொரு விஷயம் படத்தின் ஒளிப்பதிவு.
தமிழ்சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராம்ஜியின் ஒளிப்பதிவில் அந்தப் படத்துக்கே புதுக்கலர் கிடைத்திருந்தது.
ஜெயம்ராஜாவின் படங்கள் என்றாலே வழக்கமான ஃபேமிலி ட்ராமாக்கள் தான். அதற்கென்று ஒரு கலர் இருக்கும். இந்தப் படத்துக்கு என்னை ஒளிப்பதிவு செய்ய என்னை அழைத்ததும் நான் குடும்பக் கதை பண்ண மாட்டேன்னு சொன்னேன். ராஜாவும் இது குடும்பக் கதை இல்லை சார்ன்னு ஆரம்பிச்சு கதை சொன்னார்.
எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஆனா இந்தப் படத்தை பிலிம்ல தான் பண்ணுவேன்னு சொன்னேன். ஏன்னா அவர் சொன்ன கதையை பிலிம்ல ஷூட் பண்ணினாத்தான் நல்லா இருக்கும். தயாரிப்பாளர் பிலிம் என்றதும் யோசித்தார். நான் விடாப்பிடியாக இருந்து படத்தோட 90 சதவீத காட்சிகளை பிலிம்ல தான் எடுத்தேன். ஏன்னா இப்போ பிலிமே இல்லாமப் போயிடுச்சு.
எல்லாரும் டிஜிட்டல்ல மாறிட்டாங்க. அந்த வகையில் தனி ஒருவன் படம் தான் பிலிம்ல எடுக்கப்பட்ட கடைசிப் படம். அதுவும் பிலிமுக்கு பெருமை சேர்க்கிற விதமா வெற்றிப்படமா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்ற ராம்ஜி ஏற்கனவே பருத்தி வீரன், ராம், மௌனம் பேசியதே படங்களில் அமீருடனும், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் படங்களில் செல்வராகவனுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
ஒரு இயக்குநர் கிட்ட தொடர்ந்து மூன்று படங்கள் மட்டும் தான் வேலை செய்யணும். அதுக்கப்புறம் கொஞ்சம் இடைவெளி விடணும். இது என்னோட பார்முலா.
அதுக்கு மேல வேலை செஞ்சா அதுல த்ரில் இருக்காது. ஓ இந்த டைரக்டரா அப்போ இதெல்லாம் கேட்பாரு…ன்னு நமக்கு முன்னமே தெரிஞ்சிடும். அப்படி தெரிஞ்சு வேலை செய்றதுல எந்த அர்த்தமும் இல்லை. எனக்கும் அதுல திருப்தி இருக்காது. அதனால தான் ‘யோகி’ படத்துக்கு அமீர் கூப்பிட்டவும், ‘கான்’ படத்துக்கு செல்வராகவன் கூப்பிட்டவும் நான் போகல என்கிறார் ராம்ஜி.
‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகும் இன்னும் எந்தப் புதுப்படத்தையும் கமிட் செய்யவில்லையாம் ராம்ஜி. வருஷத்துக்கு ரெண்டு படங்கள் ஒளிப்பதிவு பண்ணனும்கிறது என்னோட ஆசை. அந்த ரெண்டு படங்களும் நல்ல படங்களா இருக்கணும். என்றவருக்கு இயக்குநர் ஆகும் ஆசையும் இருக்கிறதாம்.
ஒரு நல்ல நாவல் கெடைச்சா அதை படமா பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். அமைஞ்சா ஆரம்பிச்சிட வேண்டியது என்கிறார் தனது வழக்கமான ட்ரேட் மார்க் சிரிப்புடன்!
அதுவும் வெற்றி பெற வாழ்த்துவோம்.