ஜெயிக்கணும்கிற வெறியோட எடுத்த படம் தான் ‘தனி ஒருவன்’ : இயக்குநர் மோகன் ராஜா ஹேப்பி அண்ணாச்சி..!
‘ஜெயம்’ படத்துக்குப் பிறகு எப்படி ரவிக்கு ‘ஜெயம் ரவி’ என்கிற பெயர் நிலைத்ததோ அப்படியே தான் தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கியதால் ரீமேக் ராஜா என்ற பெயர் இயக்குநர் எம்.ராஜாவுக்கு நிலைத்து விட்டது.
ஆனால் கடந்த வாரம் ரிலீசான ‘தனி ஒருவன்’ அவருடைய அந்தப் பட்டப்பெயரை துடைத்தெறிந்து பிரம்மாண்ட வசூலுடன் கூடிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது ‘தனி ஒருவன்’.
முதல் தடவையாக ரீமேக் பக்கம் போகாமல் தனது சொந்தக் கதையை திரைக்கதையாக்கி மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம்.
ஒரு படத்துல ஒண்ணு ரெண்டு சீன்களாவது பழைய சீன்களா இருக்கும். ஆனால் ‘தனி ஒருவன்’ படத்துல உள்ள எல்லா சீன்களுமே ரொம்பப் புதுசா இருக்கு. உங்ககிட்ட நான் டைரக்ஷனைப் பத்திக் கத்துக்கணும்னு பிரபல இயக்குநர்களே எனக்குப் போன் பண்ணிப் பேசுறாங்க என்று உற்சாகமாகிறார் இயக்குநர் மோகன் ராஜா.
ரீமேக் படம் தான் பண்ணுவேன்னு எனக்கு ஒரு பேர் இருந்துச்சு. இல்லை என்னாலும் நேரடிப்படம் எடுத்து ஹிட்டாக்க முடியும்னு நிரூபிக்கிறதுக்காக வெறியோட இந்தப்படத்துக்கு நான் உழைச்சேன். ஏகப்பட்ட விபரங்களை சேகரிச்சேன். இவ்ளோ டீடெயில்லோட படம் பண்ணினா ரசிகர்கள் பார்க்கிறதுக்கு யோசிப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா அதையெல்லாம் படத்தோட வெற்றி தவிடு பொய்யாக்கிடுச்சு.
இன்னைக்கு இளைஞர்கள் மட்டுமில்லாமல் பெண்கள் கூட கூட்டம் கூட்டமா வந்து இந்தப்படத்தை பார்க்கிறாங்க. தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகமாயிருக்கு. உங்க படத்தை பார்த்ததிலேர்ந்து எனக்கு தூக்கமே இல்லைன்னு ரசிகர்கள் சொல்றப்போ என்னோட திறமைக்கு அங்கீகாரம் கெடைச்சதை நெனைச்சு சந்தோஷமா இருக்கு. அந்தளவுக்கு படத்துக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு இந்த நேரத்துல நான் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். என்றவர் அடுத்து தன் தம்பி ஜெயம் ரவியைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.
இந்தப் படம் இன்னைக்கு இந்தளவுக்கு ஹிட்டாகியிருக்குன்னா அதுக்கு ஜெயம் ரவியோட ஒத்துழைப்பும் அவன் கொடுத்த முழு சுதந்திரமும் தான் காரணம். நான் நேரடிப்படம் பண்ணப் போறேன்னு சொன்ன உடனே கதை கூட கேட்கல. உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ எடு நான் நடிக்கிறேன்னு சொன்னான். அதேமாதிரி அரவிந்த் சாமியும் கேட்ட உடனே கால்ஷீட் கொடுத்தார். அடுத்து என்னோட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். அகோரம் சாருக்கும் இந்த நேரத்துல நான் நன்றி சொல்லியாகணும்.
நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்க. ஆனா அது ரீமேக் படமா இல்லாம நேரடிப் படமா இருக்கணும்னு சொன்னார். சார் நான் நெனைச்சேன் நீங்க சொல்லிட்டீங்கன்னு சொல்லி சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை விட மிகப்பெரிய வெற்றிப் படமா இந்தப் படத்தை நான் உங்களுக்குத் தருவேன்னு சொன்னேன். சொன்னபடி படமும் பிரமாண்ட வெற்றிப்படமாயிடுச்சு என்றார்.
அப்புறம் இந்தப் படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறதாம், குறிப்பாக தெலுங்கில் தனி ஒருவனை ரீமேக் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
ஹிந்தியில் பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான்கான் அலுவகத்தைத் சேர்ந்தவர்கள் தனி ஒருவனைப் பார்த்து விட்டு ரீமேக் செய்ய மோகன் ராஜாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்களாம்.
ஒரு வெற்றி அதற்காகக்த்தானே எல்லோரும் ஏங்குகிறார்கள். ஆல் தி பெஸ்ட் ராஜா சார்!