அடுத்த ராமராஜன் ஆகிறாரா சரத்குமார்? : ஹைய்யோ… ஹைய்யோ…

இன்னும் பத்து வருடங்கள் கழித்து ராமராஜனை கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்கள்!
”இப்போதும் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் ஏதாவது புதுப்படம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்” என்று அசராமல் சொல்லுவார்.
ஆனால் சத்யராஜ் போன்றவர்கள் எல்லாம் தங்கள் வயதுக்கேற்ற கேரக்டர்களை ஏற்று நடிப்பதால் இன்றுவரை கோலிவுட் மட்டுமில்லாமல் பக்கத்தில் இருக்கிற டோலிவுட் வரை பிஸியாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு லிஸ்ட்டில் ராமராஜன் போலவே தனது நிலைப்பாட்டை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.
சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி அரசியலில் ஈடுபட்டு வந்த சரத்குமாருக்கு அங்கும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் அவருக்கு ஆளும் கட்சியிலேயே ரெஸ்பான்ஸ் இல்லை.
இதனால் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அவர் தமிழ் தவிர மற்ற மொழிப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அப்படித்தான் சமீபத்தில் கன்னடத்தில் புனீத் ராஜ்குமாருக்கு அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம். ‘ராஜகுமாரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் புனீத் ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
‘கன்னடத்தில் அப்பா கேரக்டரில் நடிக்க கூச்சப்படாத சரத்குமார், தமிழில் மட்டும் இப்போதும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என்று அடம்பிடிக்கிறார்.
இப்போது மீண்டும் முதல் இரண்டு வரிகளைப் படியுங்கள்!