தேவி – விமர்சனம்
RATING : 2.9/5
12 வருட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கமர்ஷியல் கிங்காக இருந்தவரை தமிழ்சினிமாவின் பேய் சீசன் என்கிற சீஸாவுக்குள் அடக்கி ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
மும்பையில் இருக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் வேலை செய்யும் பிரபுதேவாவுக்கு மாடர்னான பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்பது ஆசை. அதற்காக வேலை செய்யும் அலுவலகத்துக்கு எந்த பெண் வந்தாலும் லவ் லெட்டர் கொடுத்து விடுவார்.
இதற்கிடையே கிராமத்திலிருக்கும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வரவும் நண்பன் ஆர்.ஜே.பாலாஜியுடன் செல்பவர் அங்கு கிராமத்துப் பெண்ணான தமன்னாவை கட்டிக்கொள்கிற சூழல் வருகிறது. திருமணமான கையோடு அவரை கூட்டிக் கொண்டு மும்பை வருகிற பிரபுதேவா எப்படியாவது அவரை வீட்டை விட்டு கிராமத்துக்கு கிளப்பி விட துடிக்கிறார்.
ஆனால் தமன்னா வந்த நாள் முதல் அவர்கள் குடியேறும் வீட்டில் விநோதமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார். அதே வீட்டில் ஏற்கனவே குடியிருந்த ரூபி என்கிற பெண் நடிகையாகும் கனவு நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்டு பேயாக அலைகிறாள். தனது நடிகையாகும் ஆசையை தமன்னாவின் உடம்பில் புகுந்து கொண்டு நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் அந்த பேயின் திட்டம் பிரபுதேவாவுக்கு தெரிய வர, அவரிடமிருந்து மனைவி தமன்னாவை எப்படி காப்பாற்றினார் என்பதே கிளைமாக்ஸ்.
12 வருடங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் எண்ட்ரி கொடுத்திருந்தாலும் டான்ஸ் பெர்பார்மென்ஸ் எனர்ஜி லெவல் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை பிரபுதேவாவிடம்! மனுஷன் என்னாமா ஆடுகிறார்!! படத்தின் முதல் பாடலில் உடலை அசைத்து அசைத்து அவர் போடும் ஆட்டம் செம..! செம..!!
வழக்கமான பேய்ப்படங்களில் இருக்கிற அதிகபட்ச பயமுறுத்தல்கள் எல்லாம் இந்தப் படத்தில் இல்லை. மாறாக மனைவி தமன்னாவை காப்பாற்றுவதற்காக பேயுடன் அக்ரிமெண்ட் போடுவதும், அது செய்யும் சேட்டைகளால் அவர் படுகிற பாடுகளும் கலகலப்பாக நகர்கின்றன.
மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னாலும் கண்டிப்பாக ரசிகர்கள் அதை நம்ப மாட்டார்கள். கோயம்புத்தூரில் உள்ள வீடு என்று காட்சியில் வரும் அந்தப் பெரிய வீடு கோயம்புத்தூர்ல இவ்ளோ பெரிய வீடு எங்கேயா இருக்கு என்று ரசிகர்களே சந்தேகப்படுகிற அளவுக்கு டப்பிங் படம் என்கிற உண்மை பல்லிளிக்கிறது. போதாக்குறைக்கு படத்தில் வருகிற சில கேரக்டர்களும் இது தமிழ்ப்படமல்ல, டப்பிங் படம் என்பதை காட்டிக் கொடுத்து விடுகிறார்கள்.
எப்படியாவது தமன்னாவை வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டுமென்று நினைக்கிற பிரபுதேவா பின்னர் அவரை பேயிடமிருந்து காப்பாற்ற ஏன் அவ்வளவு தூரத்துக்கு மெனக்கிடுகிறார் என்பதற்கான அவர்களுக்கிடையே உள்ள அன்புக்கு சரியான காட்சியமைப்புகள் படத்தில் இல்லாதது பெருங்குறை.
அப்பாவி கிராமத்துப் பெண்ணாக செட்டாவதில் தமன்னா கொஞ்சம் தடுமாறினாலும் பாலிவுட்டில் நடிகையாக வரும்போது மாடர்ன் காஸ்ட்யூம்களில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். குறிப்பாக டான்ஸில் பிரபுதேவா லெவலுக்கு வேகம் கொடுத்திருப்பது ஆச்சரியம்!
படத்தில் பாலிவுட்டின் பிரபல ஹீரோவாக வருகிறார் சோனு சூட். அதைத்தாண்டி அவருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. நாசரும், சதீஷும் எதற்காக அந்த சீனில் தேவையேயில்லை. ஆர்.ஜே.பாலாஜி வருகிற காட்சிகளில் காமெடி பிரம்மாதமாக கை கொடுத்திருக்கிறது
ஒரு நடிகரின் மேனேஜர் எப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்பதை சோனு சூட்டின் மேனேஜராக வரும் முரளி ஷர்மா அசத்தியிருக்கிறார்.
சல்மார் பாடலைத் தவிர மற்றவை மனசை ஈர்க்கவில்லை. பின்னணி இசை பிரமாதன். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறது.
படம் முழுவதிலும் தென்படும் காமெடிசென்ஸ் ஓரளவுக்கு படத்தை ரசிக்க கை கொடுத்திருக்கிறது. பேயைப் பார்த்தாலே பயம் என்பது போய் இந்தப் படத்தில் ஒருபடி மேலே போய் கவர்ச்சியான உடைகளில் வலம் வர வைத்து சலிக்க சலிக்க ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.