குலேபகாவலி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 2.3/5

நட்சத்திரங்கள் – பிரபுதேவா, ஹன்ஷிகா மோத்வானி, ரேவதி, ஆனந்தராஜ் மற்றும் பலர்

இசை – விவேக் – மெர்வின்

ஒளிப்பதிவு – ஆர்.எஸ். ஆனந்தகுமார்

இயக்கம் – கல்யாண்

வகை – ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 9 நிமிடங்கள்

டிஜிட்டல் இந்தியா, ஆதார் அட்டை, 1500 ரூபாய்க்கு ஜியோ 4ஜி மொபைல் ன்னு நாடு எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்த டெக்னாலஜி காலத்துலேயும் இன்னும் புதையலைத் தேடிப்போற கூட்டம்ங்கிற அருதப்பழசான கதையை படமாக எடுத்து வெச்சிருக்காங்க.

சரி, முதல்ல கதையைக் சுருக்கமாக் கேளுங்க…

எம்.ஜி.ஆர் நடிச்ச ‘குலேபகாவலி’ படத்துல தன்னோட அப்பாவுக்கு கண்பார்வை கெடைக்கணும்கிறதுக்காக பகாவலிங்கிற நாட்ல இருக்கிற ஒரு அரிய பூவைத் தேடி போவார் ஹீரோ. இதுல என்னன்னா குலேபகாவலிங்கிற ஒரு ஊர்ல புதைஞ்சி கெடைக்கிற புதையலைத் தேடி ஹீரோ போற மாதிரி கதையை மாத்தியிருக்கிறார்கள். (நல்லவிதமா சிந்திக்க மாட்டீங்களேப்பா..?)

1945-ல வெள்ளைக்காரன்கிட்ட ஆட்டையைப் போட்ட வைரங்களை குலேபகாவலிங்கிற ஊர்ல இருக்கிற ஒரு கோவிலுக்கு பக்கத்துல பள்ளம் தோண்டி புதைச்சி வெச்சிடுறார் வில்லன் மதூசூதனனோட தாத்தா. அந்த ரகசியத்தை தன்னோட அப்பா மூலமா தெரிஞ்சிக்கிறவர் தன்னோட மச்சான் ஆனந்தராஜ்கிட்ட சொல்லி அதை எடுத்துட்டு வர்றதுக்காக ராமதாஸ், சிலை கடத்துற பிரபுதேவாவை, பிக்பாக்கெட் அடிக்கிற ஹன்ஷிகா ன்னு மூணு பேரை அனுப்புகிறார். இந்த கோஷ்டியில சின்னச் சின்னதா திருட்டு வேலைகளைச் செய்ற ரேவதியும் ஒட்டிக்கிட்டு கெளம்புறாங்க.

Related Posts
1 of 6

மறுபுறம் அந்த சிலை திருட்டுக் கும்பலை பிடிக்கிற வேலையில மும்முரமா இறங்குகிறார் போலீஸ்காரரான சத்யன்.

ஊருக்குள்ள போற நாலு பேரும் புதையலை எடுக்கிறதுக்குள்ள மொட்டை ராஜேந்திரன் , ஊர் மக்கள்னு அடுத்தடுத்து தடைகள் வருது. அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி பிரபுதேவா கோஷ்டி வைரப்புதையலை எடுத்தாங்களா? இல்லையா? ங்கிறது தான் மீதிக்கதை.

படத்தோட ஜானரை ஆக்‌ஷன், காமெடிப்படம்னு சொன்னாலும் படத்துல என்னவோ ஆக்‌ஷனை விட காமெடிதான் தூக்கலா இருக்கு. யோகிபாபு, ஆனந்தராஜ், சத்யன், ராமதாஸ், மன்சூர் அலிகான்னு அடுத்தடுத்து வரிசைக்கட்டி கிளைமாக்ஸ் வரை நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

எல்லாம் சரி, ஒருகாலத்தில் நாயகியாக நம்மைக் கவர்ந்த மாஜி நடிகை ரேவதியை எப்படி இதில் காமெடி கேரக்டரில் நடிக்க வைக்க டைரக்டருக்கு மனசு வந்ததென்றே தெரியவில்லை. கதாநாயகியாக நடித்தபோது நடிப்பில் துளி குறை வைக்காத ரேவதி, இந்தப் படத்தில் காமெடி என்ற பெயரில் காட்டும் முக பாவனைகள் நமக்கு பெரும் எரிச்சலைத் தருகிறது. அதிலும் மொட்டை ராஜேந்திரனுக்கு ரேவதி சித்தி என்று காட்டுவதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்!

படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அதுதான்  பிரபுதேவாவுக்கும். ஹன்ஷிகாவுடன் ரொமான்ஸ், டூயட், இரண்டு சண்டைக்காட்சிகள் என பேருக்கு மட்டுமே படத்தில் ஹீரோவாக வருகிறார் பிரபுதேவா.

ரோமியோ ஜூலியட், போகன் என முந்தைய படங்களைப் போல  இன்னும் எத்தனை படங்களில் தான் ஒரே மாதிரியாக நடித்து லட்சங்களில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு போவாரோ? ஹன்ஷிகா. புதிதாக எதையும் செய்யவில்லை. வழக்கமான கிளாமர் டால் ஆக வருகிறார்.

படத்தில் காமெடியைத் தவிர்த்து குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய இரண்டு அம்சங்கள் விவேக் – மெர்வின் இரட்டை இசையமைப்பாளர்களின் பின்னணி இசையும், பாடல்களும்! குறிப்பாக ‘குலேபகாவலி’ பாடல் முதல் தடவை கேட்ட உடனே மனதில் பதிந்து குத்தாட்டம் போட வைக்கிறது.

ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் கலர்ஃபுல்லான ரிச்சான ஒளிப்பதிவு, அதற்கேற்ற தொழில்நுட்ப விஷயங்கள், ஆர்ட் டைரக்டரின் உழைப்பு ஆகியவை படத்துக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன.

எளிதாக யூகிக்க முடிகிற காட்சிகள், இடைச்செருகலாக வரும் பாடல்கள், காமெடி என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன், ரேவதி ஆகியோரின் எரிச்சலூட்டும் நடிப்பு ஆகியவை படத்தின் சுவாரஷ்யத்தை வெகுவாக குறைக்கின்றன.

தெருவில் நடந்து போகிறவர்கள் தடுக்கி விழுந்த பின்பு ”என்ன புதையல் எடுத்தாயா?” என்று நக்கலாகக் கேட்பது போல வெறுங்கையை விரித்து நிற்கிறது இந்த ‘குலேபகாவலி’.

ரொம்ப நாள் கழிச்சி பிரபுதேவா நடிப்புல வந்திருக்கிற படமாச்சேன்னு வேணும்னா பார்க்கப் போகலாம், ஏன்னா படத்துல புதுசான கதைன்னு எதுவுமில்லை, அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்கிற டைரக்டர் லிஸ்ட்ல ஒருவராத்தான் ரெண்டாவது படத்திலும் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார் டைரக்டர் கல்யாண்.