நாலு தடவை மன்னிச்சிட்டேன்… இனிமே பேசினா உங்களுக்கு நல்லதில்ல! : பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை!

Get real time updates directly on you device, subscribe now.

bala1

பாலா – பாரதிராஜா என தமிழ்சினிமாவின் இரண்டு பிரபல இயக்குநர்கள் பகிரங்கமாக மோதுகிற அளவுக்கு சென்று விட்டது ‘குற்றப்பரம்பரை’ படம் இயக்குவது தொடர்பான பிரச்சனை!

”நான் எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலை பாலா இயக்கப் போகிறார், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று சென்ற வார குமுதத்தில் பேட்டி கொடுத்த எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி பாரதிராஜா ”வேலையத்தவர்” என்று சொல்லவும் பிரச்சனை பூதாகரமானது.

அந்த பேட்டி வந்த அடுத்த இரண்டு தினங்களுக்குள் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கு பூஜை போட்டார் பாரதிராஜா.

அத்தோடு பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் இந்த வார குமுதத்தில் பாரதிராஜா இயக்கப் போவதாக அறிவித்த ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் கொடுத்த பேட்டி தான் நேற்று இயக்குநர் பாலாவை கொந்தளிக்க வைத்து விட்டது.

எப்போதுமே பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகம் பேசாத பாலா நேற்று பொங்கி விட்டார்.

‘அவன்’, ‘இவன்’ என்று ஒருமையில் அவரது பேச்சிலிருந்து விழுந்த வார்த்தைகள் எந்தளவுக்கு ரத்னகுமாரின் அந்த எல்லை மீறிய பேட்டி பாலாவை காயப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருந்தது.

”பாரதிராஜா எடுப்பது வரலாறு, நான் வேல. ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலின் சில பகுதிகளை கற்பனை கலந்து எடுக்கப் போகிறேன். ஆக நான் எடுக்கப் போகிற படத்துக்கும் பாரதிராஜா எடுக்கப் போகிற படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குற்றப்பரம்பரை டைட்டிலையும் நான் பயன்படுத்தப் போவதில்லை இதை நான் பலமுறை அவர்களுக்கு சொல்லி விட்டேன். அப்படியிருந்தும் என்னை தரக்குறைவாக பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று பேச ஆரம்பித்த பாலாவின் பேச்சில் கோடை வெயிலுக்கு நிகரான அனல்…

தொடர்ந்து அவர் பேசியதாவது : ”ஒரு தன்னிலை விளக்கத்துக்காக உங்களை நான் சந்திக்கலை. காயப்பட்டிருக்கிறேன், நடந்த உண்மைகளை உங்கள் மூலமா சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சனை இந்த பூமிக்கு எந்த விதத்துலயும் பயன்படப் போறது கிடையாது.

‘குற்றப்பரம்பரை’ நாவல் வேல ராமமூர்த்தி என்பவரால் எழுதப்பட்டது. அதுக்கும் முன்னாடி பாரதிராஜா அதைப் படமாக்கப் போறாருங்கறது எனக்கும் தெரியும். அதுக்கு முன்னாடி நான் வேல ராமமூர்த்தியை சந்திச்சதே இல்லை. அந்த நாவலைப் படிச்சதும் எனக்கு ‘இம்ப்ரஸ் ஆச்சி. அதுல இருந்து சில விஷயங்களை எடுத்து படமா பண்ணலாம்னு தோணுச்சு. அப்புறம் அவரைக் கூப்பிட்டு இது எப்ப எழுதினது, பாரதிராஜா சார் வேற சொல்லிட்டிருக்காரு அப்படின்னு கேட்டேன். இது நான் வந்து ‘கூட்டாஞ்சோறு’ங்கற பேர்ல இந்தப்படம் எடுக்கணும்னு நினைக்கிறதுக்கு முன்னாடியே எழுதிட்டேன் சார், அப்படின்னாரு. அதுக்கப்புறம் அவரை சந்திச்சீங்களான்னு கேட்டேன். சந்திச்சேன் சார், வேலா உன் கைக்கு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு, உன் விரல்களுக்கு மோதிரம் அணியணும் போல இருக்குன்னு சொன்னாரு சார், அதுதான் எனக்கும் அவருக்குமான தொடர்புன்னு சொன்னாரு. இது நானும் வேல ராமமூர்த்தியும் சந்திச்சிக்கிட்ட விஷயம்.

‘குற்றப் பரம்பரை’ங்கறது முதல்ல கதை இல்லை, அது நடந்த உண்மைச் சம்பவம். நான் கதை எழுதினேன், நான் கதை எழுதினேன்னு சொல்லி யாருமே உரிமை கொண்டாட முடியாது. இது வரலாறு, இந்த வரலாறை நான் தான் படம் பிடிப்பேன்னு அடம் பிடிக்கிறது சிறுபிள்ளைத்தனமான விஷயம். வரலாறை யார் வேணால் எடுக்கலாம், நான் எடுக்கலாம், நீங்க எடுக்கலாம், யார் வேணா எடுக்கலாம்.

Related Posts
1 of 17

திடீர்னு ஒரு நாள் பாரதிராஜா சார் போன் பண்ணாரு, என்ன நீ ‘குற்றப்பரம்பரை’யை படமா எடுக்கிறியாமே?ன்னு கேட்டாரு. வேல ராமமூர்த்தி நாவல் ஒண்ணை படிச்சேன், அதை எடுக்கலாம்னு இருக்கேன், ஆனால் ‘குற்றப்பரம்பரை’ கிடையாது சார்னு சொன்னேன். நீ என்ன வேணா படம் எடு, ஆனால், ‘குற்றப்பரம்பரை’ன்னு டைட்டில் வைக்காத அது என் கனவுப் படம்னு சொன்னாரு. நான் உங்க டைட்டிலை வைக்கலைன்னு சொல்லி விட்டுட்டேன்.

ஒரு பத்திரிகையில பேட்டி கொடுக்கிறாரு, ‘பாலா என் எச்சிலைத் திங்க மாட்டான்னு’ சொல்லியிருந்தாரு. இது என்ன வார்த்தை? ரொம்ப எரிச்சலடைந்தேன். அதைப்பத்தி என்கிட்ட சிலர் கேட்டப்போ வயசு ஏற ஏற எல்லாருமே குழந்தையா மாறிடுவாங்க அதை விட்டுடுங்கன்னு சொன்னேன். அதுக்கடுத்து, அந்த வரலாறை தான் எழுதினதா சொல்லிட்டிருக்கானே ஒருத்தன், அந்தக் கதை என்னோடது, என்னோட ரத்தமும், சதையும், அந்தக் கதையை பாலா எடுத்தால் நான் கேஸ் போடுவேன்னு சொல்றான். ஒரு வரலாறைப் படமெடுக்க எனக்கு தான் உரிமை இருக்குன்னு? எந்த முட்டாப் பயலாவது சொல்வானா?

‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலையை நான் மட்டும் தான் படமெடுக்க முடியும்னு சொல்ல முடியுமா? ‘மருதநாயகம்’ படத்தை நான் மட்டும்தான் எடுக்க முடியும்னு கமல் சார் சொல்ல முடியுமா? வரலாறை யார் வேணா எடுக்கலாம். அது கூடத் தெரியலை, அவன் ஒரு பேராசியனாம். அந்த மாணவர்களை நினைச்சால் எனக்கு பரிதாபமா இருக்கு.

இதுக்கிடையில படத்துக்கு அவர் பூஜை போடறாருன்னு சொன்னாங்க. என்னைக் கூப்பிடட்டும் நான் வரன்னு சொன்னேன். இரண்டு பேரும் ஒரே விஷயத்தைப் பிடிச்சி தொங்கிட்டிருக்கோம்னு நினைச்சிட்டிருக்காங்க, இந்தப் பிரச்சனை இதோட முடியும்னு நினைச்சேன். நான் எழுதி வச்சிருக்கிறது வேற, அவர் எடுத்து வச்சிருக்கிறது வேற. கவனமா கேட்டுக்கங்க, நாங்க ரெண்டு பேரும் எழுதி வச்சிருக்கிறது வேற, அவர் எடுத்து வச்சிருக்கிறது வேற. இது கதை, அது வரலாறு, ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.

‘பிதாமகன்’ சமயத்துல இந்த ரத்னகுமார் என்னை சந்திச்சி இந்த ‘குற்றப்பரம்பரை’ கதையை நீங்கதான் படமா எடுக்கணும், பாரதிராஜாவுக்கு இதை எடுக்கத் தெரியாது. நான் பாரதிராஜாவுக்கு இனி கதை, வசனம் எழுத மாட்டேன்னு பேனாவை தரையில குத்திட்டேன்னு சொன்னான். இப்படிப்பட்ட ஒருத்தன் பாரதிராஜா முதுகுக்கு பின்னாடி நின்னுக்கிட்டு என்ன வேணால் பேசுவான், நான் அதை கேட்டுக்கிட்டிருக்கணுமா? இதை இவர் அனுமதிப்பாரா, நான் இதுவரைக்கும் நாலு தடவை மன்னிச்சேன், இனி மன்னிக்க மாட்டேன்.

சரி, இதுக்கு மேலயும் இந்தப் பிரச்சனையை வளர்க்க வேண்டாம்னு காலையில அவருக்கு போன் பண்ணேன், அவர் எடுக்கவேயில்லை. மூணாவது முறையா போனை எடுத்து, மூணாவது முறையா போன் பண்றான்டான்னு எடுத்துட்டு கட் பண்றாரு. எதைப் பேசணும்னாலும் நேரடியா பேசிட வேண்டியதுதானே, எதுக்குப் பயப்படணும்?

விக்ரமன் சாருக்கு போன் பண்ணேன், செல்வமணி சாருக்கு போன் பண்ணேன், நான் இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தேன்னா என்னை ‘மழுமட்டை’ன்னு சொல்லிடுவாங்க. நான் அப்படி இல்லைங்கறதை உணர்த்தணும்கறதுக்காகத்தான் இங்க வந்தேன்.

இந்த சந்திப்பு வந்து இந்தத் தகவலை சொல்றதுக்காக ஒண்ணு, இன்னொண்ணு எச்சரிக்கிறேன், ரெண்டு பேரையுமே. எதற்கெடுத்தாலும், நான் அந்த மண்ணு, நான் அந்த இனம், அந்த புழுதியில புரண்டவன், நான் தான் எடுக்கணும், எனக்குத்தான் உரிமைனு சொல்றாங்க. எடுங்க நான் வேண்டாம்னு சொல்லலையே, என்னை எதுக்கு குத்தறீங்க. ‘குற்றப் பரம்பரை’யை நான் எடுக்கப் போறேன்னு சொன்னனா? அந்த எச்சரிக்கைன்னு சொல்றதை கடைசி வார்த்தையா சொல்லி முடிச்சிக்கிறேன்.

இதுதான் ரெண்டு பேருக்கும் கடைசி எச்சரிக்கை, இனி ஒரு தடவை என்னைப் பத்தி வாயைத் திறந்தால், அது எனக்கு நல்லதோ இல்லையோ, அது உங்களுக்கு நல்லது இல்லை,” என ஆவேசத்துடன் கூறி முடித்த பாலா நான் எடுக்கப் போகிற படத்தில் விஷால், ஆர்யா இன்னும் சில முன்னணி ஹீரோக்கள் நடிக்கிறாங்க, இன்னும் மூணு நாலு மாசத்துல அந்தப் படத்தை ஆரம்பிப்பேன்” என்றார்.

பாலா சொல்றதைப் பார்த்தா பாரதிராஜா தான் ”அடக்கி வாசிக்கணும்” போலிருக்கு…?