வர்மா படத்திலிருந்து விலகியது ஏன்? – மெளனம் கலைத்தார் இயக்குனர் பாலா
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் பாலா.
இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிப்ரவரி 14-ம் தேதி இந்தப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று எடுத்த படத்தை போட்டுப் பார்த்த போது திருப்தியில்லை, அதனால் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி திருப்தியாக இல்லை. அதனால் இந்தப் படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மீண்டும் இதே படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க தயாரிக்க இருக்கிறோம் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தமிழ்சினிமா துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்ட நிலையில் இன்று தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா.
அதில் அவர் கூறியிருப்பதாவது ‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.
படைப்பு சுதந்திரம் கருதி, ‘வர்மா’ படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டோம். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை” இவ்வாறு பாலா தெரிவித்திருக்கிறார்.