சங்கத்திலிருந்து நீக்குங்கள்! : பீட்டா ஆதரவு நடிகர் நடிகைகளுக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

Get real time updates directly on you device, subscribe now.

‘பீட்டா’ என்கிற சொல் இளைஞர்களின் போராட்டத்தில் மிதிபட்டு மிதிபட்டு ‘பேட்டா’ செருப்பாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அப்படிப்பட்ட அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து கொண்டே நான் அதில் உறுப்பினர்களாக இல்லை என்று பல்டியடித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள் சில நடிகர், நடிகைகள். அவர்களின் இந்தச் செயலுக்கு திரையுலகிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

‘தமிழ்திரைப்பட கலாச்சார பாதுகாப்புக் குழு’ சார்பில் நடிகரும், இயக்குநருமான சேரன் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களை கொஞ்சம் ”கவனிக்கும்படி”  நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோரிடம் இன்று மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் வைத்திருக்கும் கோரிக்கைகள் இதுதான் :

+ நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் யாரெல்லாம் ‘பீட்டா’வில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ? அவர்களை தாங்களாகவே அந்த அமைப்பிலிருந்து வெளியேற வலியுறுத்த வேண்டும்

Related Posts
1 of 85

+ அப்படி நடிகர் சங்கத்தின் வலியுறுத்தலை கேட்காத நடிகர், நடிகைகளை உடனடியாக சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து வெளியேற்றி இனி வரும் காலங்களிலும் நமது சங்க உறுப்பினர்கள் ‘பீட்டா’வில் எந்தவித தொடர்பும் வைக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

+ வெளியேறாத அல்லது ‘பீட்டா’ அமைப்பில் உறுப்பினராக இருப்பதை வெளியில் சொல்லாமல் மறைத்து அவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார் என்கிற விஷயம் பின்னாளில் தெரிய வந்தால் தமிழ் சமூகம் அவர்களது படங்களை புறக்கணிக்கும். அந்நிலையில் நடிகர் சங்கம் அவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்காது என்பதை அறிவிக்க வேண்டும்.

+ பாரம்பரியமிக்க நடிகர் சங்கம் தமிழர்களாலும் தமிழ்க்கலாச்சாரத்தினாலும் தமிழக மக்களின் ஆதரவாலும் உருவானது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் ‘தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்’ என்று மாற்ற வேண்டும்.

மேலே சொன்ன நான்கு கோரிக்கைகளையும் உறுதிபடுத்தி தமிழக மக்கள் மேல் அக்கறையும், மரியாதையும் கொண்ட நடிகர், நடிகைகள் தான் நடிகர் சங்கத்தில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவீர்கள் என நம்புவதாக கூறியிருக்கிறார் இயக்குநர் சேரன்.

இப்படி பீட்டா ஆதரவு நடிகர், நடிகைகளுக்கு திரையுலகிலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் கலக்கத்தில் இருக்கிறார்கள் பீட்டா அபிமானிகள்.