என்னை காலி பண்ண நினைக்கிறார்கள்! : ‘கபாலி’ ரஞ்சித் பகீர்
எந்தளவுக்கு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்ததோ? அதற்கு கொஞ்சமும் குறையாமல் சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது ‘கபாலி’ திரைப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற ஆளுமையை இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் பயன்படுத்தியிந்த விதம் குறித்து இப்போதும் விவாதிப்பவர்கள் எக்கச்சக்கம் பேர்.
படத்துக்கு எதிரான கருத்துகளை தாண்டியும் கமர்ஷியலாக வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலிலும் பல பாலிவுட் படங்களின் சாதனையே முறியடித்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு 25 நாட்களை தாண்டிய கபாலி படம் பற்றியும், அதில் பேசப்பட்டிருக்கும் கருத்துகள் பற்றியும் ஒரு உரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தேறியது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் வெளிப்படையாக சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கபாலி ரிலீசான முதல் நாளே அந்தப் படத்தை காலி செய்வதற்கான முயற்சிகள் நடந்தது என்று பகீர் கிளப்பினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :
‘கபாலி’ ரிலீசாகும் போதே நெறைய பேர் இதைப்பத்தி பேசுவாங்க. முதல்நாளே காலி பண்றதுக்கு முயற்சி பண்ணுவாங்கன்னு யோசிச்சேன். நான் என்னோட அசிஸ்டெண்ட்கிட்டவே முதல்நாள் படம் நல்லா இல்ல, படம் ப்ளாப்புன்னு எல்லோரும் சொல்வாங்கன்னு சொல்லி வெச்சிருந்தேன். அது நடந்தது.
ஆனா தினமணி மாதிரியான ஆட்கள் எதிர்ப்பதெல்லாம் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஏன்னா இவங்க எல்லாம் யாருன்னு எனக்கு நல்லவே தெரியும். ஆனா முற்போக்குன்னு ஒரு கூட்டம் இருக்குதுல்ல அதுக்குள்ள நம்மளை நிக்க வெச்சு நாம பேசுறப்போ இவங்கெல்லாம் நமக்கு உதவியா இருப்பாங்கன்னு நெனைப்போம்ல. அவங்க நம்மளை காலி பண்ணுவாங்கன்னு நான் நெனைக்கவே இல்லை. ஆனா நடந்தது. அது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.
‘கபாலி’ எனக்கு ஒரு படிப்பினையை கொடுத்திருக்குன்னு தான் நெனைக்கிறேன். மத்தபடி இன்னைக்கு வரைக்கும் இந்தப்படம் எல்லாத் தியேட்டர்லேயும் ஹவுஸ்புல்லா ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. ‘கபாலி’க்குப் பிறகு நெறைய படங்கள் வந்தபிறகும் ‘கபாலி’ நல்லா ஓடிக்கிட்டிருக்கு.
பொதுமக்கள் இதுபோன்ற படங்களுக்கு எப்போதுமே ஆதரவை தரத்தான் செய்கிறார்கள். ஆனால் சிலர் திட்டமிட்டு ஆதரவு அளிக்கக்கூடாதென்று படத்துக்கு எதிராக வேலை செய்கிறார்கள். திருவண்ணாமலை பக்கத்துல ஒரு தியேட்டர்ல பதினைஞ்சு பேர் வெளியில நின்னுக்கிட்டு இந்தப்படத்துக்கு போகாதீங்க, படம் நல்லா இல்லேன்னு படம் பார்க்க வர்ற ரசிகர்கள்கிட்ட பிரச்சாரம் செஞ்சதா கேள்விப்பட்டேன். ரெண்டாவது நாளே இது நடந்தது.
நிச்சயமா இந்தப் படத்துல பிரச்சனை இருக்கு. அது எனக்கு நல்லவே தெரியும். அதை மீறித் தான் இந்தப் படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு யோசிச்சோம். அதுக்காக நான் நம்புனது ரஜினி. அவரோட சூப்பர் ஸ்டார்ங்கிற பிம்பம் எனக்கு ரொம்ப அவசியத் தேவையா இருந்துச்சு. யார் மூலமாக என்னுடைய வார்த்தைகளை என்னுடைய குரலை நான் பேசணும்னு யோசிச்சு அதன்மூலமாகத்தான் நான் பேசிருக்கேன். அந்தக் குரலுடைய வேகம், பவர், வீச்சு, சத்தம் எல்லோருடைய காதையும் கிழிச்சுருக்குன்னு நம்புறேன்.
இன்னும் நெறைய வீடுகளில் டிவிகள் மூலமாக இந்தப்படம் போய் பேசும். தமிழகம் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் இந்தப்படம் விவாதத்தை கிளப்பி விட்டிருக்கு. மலேசியா, புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இது பேசப்பட்டிருக்கு.
இந்தப்படத்தைப் பற்றிய எந்த விமர்சனமாக இருந்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். மற்றபடி என்னை திட்டுறவங்களைப் பத்தியோ அல்லது காலி பண்ணனும்னு நெனைக்கிறவங்களைப் பத்தியோ எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. தொடர்ந்து என்னுடைய குரலை என்னுடைய எல்லாப்படைப்புகளும் தொடர்ந்து பேசும் என்றார்.