நடிகைகளைப் பற்றி தரக்குறைவான கமெண்ட்! : மன்னிப்பு கேட்டார் இயக்குநர் சுராஜ்
‘கத்தி சண்டை’ படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சியான உடைகள் அணிந்து நடித்திருக்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த இயக்குநர் சுராஜ் “கதாநாயகிகள் முழுக்க உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாங்கும் சம்பளத்திற்கேற்ப நடிகைகள் கவர்ச்சியான ஆடை அணிந்துதான் நடிக்க வேண்டும். பணம் கொடுத்து தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஹீரோயின்களை கவர்ச்சியாகத்தான் பார்க்க ஆசைப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
சுராஜின் இந்த கருத்தால் கடும் கோபம் கொண்ட தமிழ்சினிமா நடிகைகள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாராவும் ”சம்பளத்திற்காக குறைந்த ஆடையுடன் நடிக்க நடிகைகள் ஒன்றும் விபச்சாரிகள் இல்லை.” என்று சுராஜின் கருத்தை கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் சுராஜ், நடிகைகள் ஆடைகளைப் பற்றி தான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”என்னை மன்னியுங்கள், செல்வி தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரைப்பற்றியும் தவறாகப் பேசி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. மீண்டும் மன்னிக்க வேண்டும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு இயக்குநர் சுராஜ் கூறியிருக்கிறார்.