சிறிய பட்ஜெட்ல படம் எடுக்க முடியுது, ஆனா ரிலீஸ் தான் பண்ண முடியல… : இயக்குநர் விக்ரமன் கவலை
புதுமுகங்கள் நடித்த ‘எடால்’ திரைப்படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரும் இயக்குநருமான விக்ரமன் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்.
“’எடால்’ என்றால் எலிப்பொறி. இந்த படம், பார்க்கிற ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்யும், நிறைய உற்சாகத்தை தரும் என்று நான் நம்புகிறேன்.
இந்த படத்திற்கு ஜோ-ஸ்மித் இருவரும் இசை அமைத்திருக்கிறார்கள். பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.
எப்படி புதுமுகங்கள் நடித்த பல படங்கள் ‘ஒரு தலை ராகம்’ காலத்திலிருந்து வெற்றி பெற்றிருக்கிறதோ, அந்த வரிசையில் புதுமுகங்கள் நடித்திருக்கிற இந்த படமும் இடம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இன்னைக்கு திரைப்பட சூழல் சிரமமாக இருக்கிறது. சின்ன படம் எடுக்கிறது ரொம்ப எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் ரிலீஸ் பண்றது ரொம்ப சிரமமாக இருக்கிறது. தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் தேதி சாரியாக அமைவதில்லை. ஒரே நேரத்தில் 15 சிறிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்.
பலமுறை நாங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இதை திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எல்லோரும் கலந்து ஆலோசித்து சிறிய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வழியை செய்ய வேண்டும் என்று நான் இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
அதாவது மாதத்தில் மூன்று வாரங்களாவது சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும் பண்டிகை காலங்களில் மட்டும் தான் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்று ஒரு விதிமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் சிறிய படங்கள் பிழைக்க முடியும்.
என்னதான் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றாலும் கூட சினிமா தோன்றிய காலம் தொட்டு தமிழ் சினிமாவை வாழ வைத்தது எல்லாமே சிறிய படங்கள் தான்.
சிறிய படங்கள் தான் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது. அதனால் இந்த சிறிய படங்கள் ஜெயிப்பது இண்டஸ்ரிக்கு மிகவும் ஆரோக்கியமானது. அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
எனவே ‘எடால்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களை ஆதாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு இயக்குநர் விக்ரமன் பேசினார்.