செருப்புக்குப் பின்னால ஒரு செமக்கதை! : அட அசத்துறாருப்பா ஜெகன்நாத்!
சில படங்களின் டைட்டில்களை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்க முடியாது. கேட்டவுடனே சிரிப்பை வரவழைக்கிற அந்த மாதிரியான டைட்டில்கள் இது எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்று பார்க்கிற ஆவலையும் தூண்டும்.
அப்படி ஒரு ஆவலைத் தூண்டுகிற டைட்டிலைத்தான் தனது புதுப்படத்துக்காக வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன் நாத்.
‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற யதார்த்த வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் தான் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘என் ஆளோட செருப்பை காணோம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்.
ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தன் சகோதரர் விஜயன் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் நடித்த பாண்டி ‘தமிழ்’ என்கிற பெயர் மாற்றத்தோடு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார்.
செருப்பை வெச்சு ஒரு படமா? என்று டைட்டிலைக் கேட்டவுடனே நம் புருவம் உயரும் அல்லவா? அதன் பின்னால் இருக்கிற சுவாரஷ்யங்கள் எக்கச்சக்கம் என்றபடியே டைட்டிலுக்கான கதை சமாச்சாரத்தை சொன்னார் ஜெகன் நாத்.
” செருப்பை நாம ஒரு சாதாரண பொருளாகத்தான் பார்க்கிறோம். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. ஆனா அது நம்மோட வாழ்க்கையிட பல சம்பவங்களை நடத்திட்டுப் போயிடும்.
அப்படித்தான் ஒரு நாள் என்னோட புதுப்படத்தோடை கதையைச் சொல்றதுக்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் ஒரு மீட் பண்ணக் கிளம்பினேன். அடிச்சு பிடிச்சு டைமுக்கு ஹோட்டலுக்கு பக்கத்துல போனப்ப செருப்பு பிஞ்சுப் போச்சு. அதை கையில தூக்கிக்கிட்டும் போகவும் கூச்சம், தூரவும் எறிய முடியல. அப்புறம் அங்கிருந்தே அவருக்கு போனைப் போட்டு மீட்டிங்கை சாயங்காலம் வெச்சுக்கலாமான்னு கேட்டுட்டு மீட் பண்ண முடியாம திரும்பி வந்துட்டேன்.
ஆனால் அவரை அதுக்கப்புறம் என்னால மீட் பண்ண முடியல. ஒருவேளை மீட் பண்ணியிருந்தா தெலுங்குல நான் ஒரு ஹிட் படம் கொடுத்திருப்பேன். இப்படித்தான் ஒரு செருப்பு எப்படி ஒருத்தோட வாழ்க்கையை மாத்துதுங்கிறதை சுவாரஷ்யமா சொல்றது தான் இந்தப் படமும் என்றார்.
கதையை சொல்லப்போன இயக்குநர் ஜெகனிடம் ஹீரோ ‘பசங்க’ பாண்டி என்று சொன்னதும் கொஞ்சம் தயங்கியிருக்கிறார் நாயகி ஆனந்தி. அப்புறம் கதையைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டு இந்தப் படத்தில் நான் கண்டிப்பா நடிக்கிறேன் சார் என்று கால்ஷீட் சொதப்பலில்லாமல் நடித்துக் கொடுத்தாராம்.
செருப்பும், மழையும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்திருப்பதால் பெரும்பாலான காட்சிகளை கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிஜ மழையில் எடுத்திருக்கிறார்கள்.
யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் என தமிழில் இப்போதைக்கு இருக்கிற அத்தனை காமெடியன்களையும் இந்தப் படத்தில் பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கும் ஜெகன் நாத் படம் கமர்ஷியலாகவும், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிப்படமாகவும் இருக்கும் என்றார்.
செருப்புக்குப் பின்னால ஒரு கதையை? அட அசத்துறாருப்பா ஜெகன்நாத்!