என்னுள் ஆயிரம் – விமர்சனம்
RATING : 2.3/5
வாரிசு நடிகர்கள் வரிசையில் அடுத்த வரவு நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹாவின் நடிப்பில் வந்திருக்கும் படம் தான் இந்த ‘என்னுள் ஆயிரம்’.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் மஹாவுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை கிடைக்கிறது. கூடவே ஃபேங்கில் வேலை செய்யும் நாயகி மெரினாவின் காதலும் கிடைக்கிறது.
மெரினாவை பார்ப்பதற்கு முன்பு கணவன் இல்லாமல் தனியாக வசிக்கும் இன்னொரு நாயகி ஸ்ருதியுகல் உடன் கள்ளத்தனமான உறவு வைத்து விட்டு அந்த குற்ற உணர்ச்சியோடு தேவாலயத்துக் சென்று பாவமன்னிப்பு கேட்கிறார்.
ஆனால் அங்கு சந்தர்ப்ப வசத்தால் பாதிரியாரை கொலை செய்து விட்டு தப்பித்து விடுகிறார். அதோடு சிட்டியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்க, அதில் மஹாவும் சிக்குகிறார்.
இன்னொரு பக்கம் காதலி மெரினாவின் வீட்டில் அவளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்கிறது. ஆனால் நாயகியோ என்னை எப்படியாவது கூட்டிச்சென்று திருமணம் செய்து கொள் என்கிறாள். ஆசைப்பட்டபடி நாயகி மெரினாவை மஹா கைபிடித்தாரா? வலை வீசித் தேடும் போலீஸ் கண்ணில் சிக்கினாரா? என்பதே கிளைமாக்ஸ்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் டெல்லி கணேஷின் மகன் மகாவுக்கு இயல்பான நடிப்பு முதல் படத்திலேயே வந்திருக்கிறது. அதற்கேற்ற கதையை தேர்ந்தெடுத்திருப்பது அவரது புத்திசாலித்தனம். பல காட்சிகளில் நடிக்கிறார் என்பது தெரியாமலேயே நடித்திருப்பது அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பதற்கு கியாரண்டி.
இரு நாயகிகளில் மெரினா மைக்கேல் இளமைக் குறும்புகளுடன் கவர்கிறார். இன்னொரு நாயகி ஸ்ருதி யுகல் ஹீரோவுடனான நெருக்கமான காட்சியில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரு குற்றவாளியை அடிக்க சொல்லும் காரணம் காக்கிகளுக்கே உரிய தோரணை.
அதிசயராஜின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்ட அழகும், மழை காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
கோபி சுந்தரின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் மோசமில்லை. இடைவேளைக்குப் பிறகு நீளும் காட்சிகள் சிலவற்றுக்கு ‘கத்தரி’ போட்டிருக்கலாம்.
வித்தியாசமான கதையம்சத்தோடு களமிறங்கியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் சரக்கு உள்ளவராகத் தான் தெரிகிறார். என்ன அந்த சரக்கை எப்படி நேர்த்தியான திரைக்கதையாக்க வேண்டும் என்பதில் தான் ‘ஆயிரம்’ தடுமாற்றம்.
‘என்னுள் ஆயிரம்’ என்று படத்திற்கு டைட்டிலுக்கு ஏற்ப அம்மா செண்டிமெண்ட், எண்கவுண்டர், காதல், கள்ள உறவு, கொலை என ஏகப்பட்ட காட்சிகளை வைக்க ஆசைப்பட்ட இயக்குநர் அதை காட்சிப்படுத்துவதில் தானும் குழம்பி ரசிகர்களையும் குழப்புகிறார்.
அதை மட்டும் தவிர்த்திருந்தால் வித்தியாசமான கதைக்களத்தை விரும்பும் ரசிகர்கள் ஆயிரம் முறையல்ல, ஒருமுறையாவது பார்த்தே ஆக வேண்டிய படம் தான் இந்த ‘என்னுள் ஆயிரம்’.
என்னுள் ஆயிரம் – ஒரு தடவையாவது ரசிக்கலாம் தப்பில்லை!