கேங்கர்ஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நிஜமாகவே வடிவேலு ரிட்டர்ன்ஸ் ஆ?

ரொம்ப சீரியஸான கதையை கூடுமான வரை சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயற்சித்துள்ளார் சுந்தர் சி. கேத்ரின்தெரசா ஆசிரியையாக இருக்கும் பள்ளி ஒன்றில் ஒரு மாணவி தொலைந்து போகிறாள். அந்தப் பள்ளிக்கு பிடி. மாஸ்டராக வருகிறார் சுந்தர் சி. மேலும் அந்த ஊரில் மைம்கோபி அருள்தாஸ் இருவரும் பல அட்டகாசங்களைச் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் பிடி மாஸ்டர் சுந்தர் சி மற்றும் வடிவேலு டீம் இணைந்து எப்படி வகுப்பெடுத்து வில்லன் கோஷ்டியை வகுந்தெடுக்கிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை

சுந்தர் சி தன் மீட்டருக்கு ஏற்றபடி நடித்து ஒப்பேற்றியுள்ளார். காதல், காமெடி, ஆக்சன் என சகல ஏரியாவிலும் சளைக்காமல் பார்டர் தாண்டியிருக்கிறார். வடிவேலு கம்பேக் என்ற வார்த்தையை தமிழ்சினிமா நிறைய முறை சொல்லியிருந்தாலும், இதில் ஓரளவு கம்பேக் என்று சொல்லலாம். சில இடங்களில் நிஜமாகவே சிரிக்க வைத்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதி முழுதும் வடிவேலுசம் தான். அருள்தாஸ் மைம்கோபி முரட்டுத்தனமான வில்லனிசத்தைக் காட்ட, ஹரிஷ்பேரடியும் ஸ்கோர் செய்கிறார். பக்ஸ், முனிஷ்காந்த் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்

பின்னணி இசையில் அசத்திய சத்யா பாடல்களிலும் கெத்துக் காட்டியிருக்கலாம். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஒளிப்பதிவாளர் தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள் அனைத்துமே நன்றாக கைகூடியிருக்கிறது

எல்லாக் கேரக்டர்களின் அறிமுகம் முடிந்து கதைக்குள் படம் மிக மெதுவாகவே வருகிறது. மேலும் முன்பாதி முழுக்க ஒப்பேற்றல் காமெடிகள் கடுப்பேத்துகின்றன தான். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து பின்பாதியில் பின்னியிருக்கிறார்கள். இந்தக் கதைக்குள் சுந்தர் சி யுனிவர்ஸைச் சேர்த்து கோர்த்த விதம் சிறப்பு. லாஜிக் என்பது மருந்திற்கும் இல்லை என்றாலும், இந்த கோடைக்கு ஏற்ற ஒரு குடும்பப்படமாக எஸ் ஆகிறது இந்தக் கேங்கர்ஸ்
3/5