மெரினாவில் நடந்தது என்ன? : பரபரப்பான உண்மைகளை வெளியிட்ட லாரன்ஸ்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் ஒன்று கூடிய அறவழிப்போராட்டம் போலீசாரின் பொறுமையின்மையால் பெருங்கலவரத்தில் முடிந்தது.
உலகமே உற்று நோக்கி உச்சி முகர்ந்த மாணவர்கள், இளைஞர்களின் இந்த அறப்போராட்டத்தில் நடிகர் ராகவா லாரன்ஸும் மாணவர்களுடன் இறுதிநாள் வரை களத்திலேயே இருந்தார்.
இதற்கிடையே மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் லாரன்ஸ், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே. பாலாஜி போன்ற திரையுலகினர் உள்ளே வந்ததால் தான் எங்கள் போராட்டம் திசை மாறி விட்டது என்று புகார் கூறினார்.
ஆனால் மெரினாவில் நடந்தது என்ன? என்பது பற்றி தன்னுடைய சார்பில் விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
“மாணவர்கள் நடத்திய போராட்டம் 7 நாட்கள் அமைதியாகவே நடந்தது. அதன் பின்பு தமிழக அரசு அவசர சட்டத்தையும் நிறைவேற்றியது. ஆளுநர் கையெழுத்து இட்டதும் நாம் போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என கூறிவிட்டு, நான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.
ஆனால், அடுத்த நாள் அதிகாலை கடற்கரையில் போலீசார் தடியடி நடத்துவது கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே மெரினாவிற்கு சென்று மாணவர்களிடம் பேச நினைத்தேன். ஆனால், போலீசார் என்னை அனுமதிக்கவில்லை. அதன் பின் உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி, உள்ளே சென்று, நாம் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் எனக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினேன்.
ஆனால் சம்பந்தம் இல்லாத சிலர் என்னை பேச விடாமல் எதிர்த்தனர். நான் அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தவன் என குற்றம் சுமத்தினர். மாணவர்களின் போராட்டத்தில் சில அமைப்புகள் ஊடுருவியுள்ளனர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறி விட்டது. மாணவர்கள் சரித்திரம் படைத்து விட்டனர். ஆனால், அதை கொண்டாட முடியாமல், கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்?.
கலவரத்து யார் காரணம் என்பது மர்மமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு தடை நீங்க காரணமாக இருந்த முதல்வர் மற்றும் பிரதமருக்கு நன்றி. மாணவர்கள் போராட்டம் வெற்றி அடைந்தததை முன்னிட்டு, அடுத்த மாதம் விழா நடத்துவோம். அதில் அனைவரையும் பாராட்டுவோம்.
போராட்டத்தின் போது முதல்வரையோ, பிரதமரையோ யாராவது தவறாக பேசியிருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். கைது செய்தவர்களை போலீசார் விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு உருக்கமாக கூறியிருக்கிறார் லாரன்ஸ்.