காஞ்சனா 2 – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Untitled-1

”எப்ப அங்கிள் காஞ்சனாவோட அடுத்த பார்ட் வரும்…” என்று குழந்தைகளே விரும்பி கேட்கிற அளவுக்கு முந்தைய இரண்டு பாகங்களையும் ஹிட்டாக்கிய லாரன்ஸ் மூன்றாவது பாகமாக ‘காஞ்சனா 2’ வை இயக்கித் தந்திருக்கிறார்.

வழக்கம் போல ஏழு கழுதை வயசிலும் ‘பேய்’ என்கிற வார்த்தையை கேட்டாலே உச்சா போகப் பயப்படுகிறவர் தான் லாரன்ஸ்.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த தனியார் டிவி சேனலான ‘க்ரீன் டிவி’ போட்டி டிவி சேனலால் அந்த இடத்தை தவறவிட்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது.

இதனால் எப்படியாவது விட்ட முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்கிற சேனல் முதலாளியின் கனவை நிஜமாக்க அவரது மனைவி சுஹாசினி சேனல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதில் ஹீரோயின் டாப்ஸி போட்டி டிவி சேனல் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி முதலிடத்துக்கு வந்தது. அதனால் நாம் அதற்கு எதிரான பேய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ‘செட்டப்’ செய்து தயாரித்து ஒளிபரப்பினால் முதலிடத்தை பிடித்து விடலாம் என்று ஐடியா தருகிறார்.

அந்த ஐடியா சுஹாசினிக்குப் பிடித்துப் போக டாப்ஸியின் தலைமையில் ஒரு டீம் காட்டுப்பாக்கம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு போகிறது. டாப்ஸியை காதலிக்கும் லாரன்ஸ் தான் அந்த டீமில் கேமராமேன். பேய் நிகழ்ச்சி என்றதும் முதலில் வரமாட்டேன் என்று மறுக்கும் லாரன்ஸ் டாப்ஸியை காதலிப்பதற்காக வர சம்மதிக்கிறார்.

லாரன்ஸ், டாப்ஸீ, ஸ்ரீமன், மனோபாலா, சாம்ஸ் என ஒரு டீம் பேய் இருப்பது போல பொய்யாக நிகழ்ச்சியை படமாக்கப் போகிறார்கள்.

ஆனால் போன இடத்தில் நிஜமாகவே ஒரு பேய் அவர்களை ஆட்டுவிக்க, அதன்பிறகு நடப்பதெல்லாம் ரசிகர்களின் காதுகள் ரெண்டும் கிழிந்து தொங்குற அளவுக்கு இரைச்சல்களோடு பக்கா மசாலாவோடு முடிகிறது.

Related Posts
1 of 5

முந்தைய இரண்டு படங்களும் நல்ல வசூலைக் கொடுத்ததாலோ என்னவோ இதில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். மொட்டை சிவா, கிழவி, 7 வயசு சிறுமி என இருக்கிற எல்லா கெட்டப்புகளையும் தானே போட்டுக்கொண்டு நடிப்பில் அசரடிக்கிறார். அவர் வருகிற காட்சிகளில் தியேட்டர் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளிக்கொண்டே இருக்கிறது.

டாப்ஸியை காதலிக்க வைக்க அவர் செய்யும் சேட்டைகளும், பேயிடம் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளும் பார்க்கும் குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

இடைவேளை வரை மாடர்ன் மங்கையாக வரும் டாப்ஸி இடைவேளைக்குப் பிறகு ‘ஆவி ஆட்டம்’ ஆடியிருக்கிறார். மாற்றுத்திறனாளியாக ப்ளாஸ்பேக் காட்சிகளில் வரும் நித்யாமேனன் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் அந்த கேரக்டர் அழுத்தமாக இல்லை.

குழந்தைகளை சிரிக்க வைக்க நினைத்த லாரன்ஸ் எதற்கு மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் கூட்டணியில் ‘டபுள் மீனிங்’ காமெடிக் காட்சிகளை திணித்தார் என்று தெரியவில்லை. அதை தவிர்த்திருக்கலாம்.

கோவை சரளா வழக்கம் போல கத்தாமல் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் முந்தைய பாகங்களில் இருந்த அவருடைய ஏரியாவில் இதில் கொஞ்சம் காமெடி வீக்.

எஸ்.எஸ்.தமனின் பின்னணி இசை இசையாக இல்லாமல் இரைச்சலாகியிருக்கிறது. பாடல்களில் முந்தைய பாகங்களில் இருந்த பெப் இல்லை.

நடித்து இயக்கியிருக்கும் லாரன்ஸ் காமெடிக்காட்சிகளை குறைத்து விட்டு குழந்தைகளை நிஜமாகவே பயமுறுத்தும் காட்சிகளை அதிகமாக சேர்த்திருக்கிறார்.

காஞ்சனாவைப் பார்த்து குழந்தைகள் சிரிக்கும் வரை தான் லாரன்ஸ் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடியும்.

இதை மனதில் வைத்து ‘காஞ்சனா 3’ யை எடுத்தால் இன்னும் 5 அல்ல, 500 பாகங்களை  கூட எடுக்கலாம்.