சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல!

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…
நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேண்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்.
இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.