குலுகுலு- விமர்சனம்

சந்தானம் ரத்னகுமார் காம்போவே வித்தியாசமான காம்போ. முன்னவர் கவுண்டர் வசனங்களால் கவர்பவர். பின்னவர் வித்தியாசமான முயற்சிகளை செய்பவர். இருவரும் இணைந்துள்ள குலுகுலு எப்படி இருக்கிறது?
தன் பழங்குடி இனத்தை பறிகொடுத்து விட்டு, தன்மொழி பேச கூட ஆளில்லாமல் வருந்தும் சந்தானம் ஓர் மனிதநேயர். அப்படி பிறருக்கு உதவி செய்யப்போகும் அவருக்கே முதலுதவி தேவைப்படும் சூழல் படத்தில் வருகிறது. அவற்றை சந்தானம் எப்படி எதிர்கொண்டு, தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் கரையேற்றுகிறார் என்பது தான் குலு குலுவின் பயணம்
அதிகம் பேசாமல் பார்வையாலே நடிக்க வேண்டிய வேலை சந்தானத்திற்கு. கூடுமான வரை முயற்சித்துள்ளார். அவரது தாடி வைத்த உருவமும் ஓரளவு சப்போர்ட் செய்கிறது. இருநாயகிகள் உள்பட அனைவருக்கும் படத்தில் நல்ல ஸ்கோப் இருப்பது பாசிட்டிவான விசயம். குறிப்பாக சார்ஜ் டீம் கேரக்டர்ஸ் வடிவம் நச் ரகம். படத்தில் அவ்வப்போது பூஸ்ட் கொடுப்பது அவர்கள் தான்
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் நல்ல கோர்வை. கதை நகர்வை உணர்ந்து அழகாக இசையமைத்துள்ளார். போலவே விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் ரம்மியம். க்ளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் பட டோனை நினைவுப்படுத்துகிறது ஒளிப்பதிவு. அவ்வப்போது ஒலிக்கும் ஒரு கானா பாடல் சூப்பர்
படம் துவங்கி ஒரே சீராக பயணிக்க மாட்டேன் என்கிறது. திடீரென நல்ல காமெடி சீன் வருகிறது. டக்கென்று யூ-டர்ன் போட்டு சுமாரான சீனுக்குள் சிக்கிவிடுகிறது. படத்தின் வசனங்கள் எல்லாமே மிகச்சிறப்பு. முழுக்க முழுக்க டார்க் காமெடி படத்திற்கு வசனம் மிக முக்கியம் அதை உணர்ந்து எழுதியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். போகிற போக்கில் ஆங்காங்கே தெறித்துவிழும் அரசியல் வசனங்கள் சிறப்பு. 20 நிமிடங்களை ஷார்ப்பாக வெட்டி 2 மணி நேரப்படமாக மாற்றியிருந்தால் குலு குலு வளவள என்றில்லாமல் ஈர்த்திருக்கும்.
3/5