‘சுந்தர்.சி’யின் பெயரைத்தான் என் குழந்தைக்கு வைத்திருக்கிறேன் : நெகிழ்ந்து போன நாளைய இயக்குநர்!
எடுத்திருப்பது காமெடிப்படம் என்றாலும் அறிமுக இயக்குநர் பாஸ்கர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் எல்லாமே அங்கு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தது என்னவோ உண்மை.
ஒரு இயக்குநராக பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குநர் சுந்தர்.சி முதல்முறையாக அவ்னி மூவிஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் தான் ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’.
‘நாளைய இயக்குநர் – சீஸன் 4’ ல் வெற்றி பெற்ற பாஸ்கரை தனது நிறுவனத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுந்தர்.சி
நேற்று மாலை நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் ஹீரோ வைபவ், ஹீரோயின்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, மற்றும் வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி, யோகிபாபு, சிங்கர்பூர் தீபன், இயக்குநர் பாஸ்கர், தயாரிப்பாளர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தின் இயக்குநர் பாஸ்கர் பேசியது நெகிழ வைப்பதாக இருந்தது… நான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம், திரைப்படம் இயக்கி இன்று திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளேன். பிப்ரவரி 20-ம் தேதி என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்ல வேண்டும், அன்றுதான் நான் இயக்குநரிடம் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்டவர் பாஸ்கர் நீங்க தான் இந்தப்படத்தோட இயக்குநர் என்றார். அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு தான் அவர் இரண்டாம் பாதியின் மீதி கதையை கேட்டார். கேட்ட உடனே படத்துக்கான வேலையை ஆரம்பிச்சிடுங்க. உங்களுக்கு என்ன தேவையோ கம்பெனியில கேட்டு வாங்கிக்கங்க என்றார்.
இயக்குநர் சுந்தர்.சி அவர்களிடம் கதை சொன்ன பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே மாறியது. அவரால் தான் நான் இன்றைக்கு இந்த மேடையில் நிற்கிறேன். எனக்கு குழந்தை பிறந்த உடன் என்னுடைய தயாரிப்பாளரின் பெயரான சுந்தர் என்ற பெயரைத் தான் வைத்துள்ளேன். என்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்ததும் அவர் தான் என்று நெகிழ்ந்து பேசினார் இயக்குநர் பாஸ்கர்.
பின்னர் பேசிய தயாரிப்பாளர் சுந்தர்.சி இயக்குநர் பாஸ்கரை எனக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் தான் தெரியும். அவர் எடுக்கும் நகைச்சுவை குறும்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரை வைத்து நான் படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்ததும் அவர் என்னிடம் “திருடர்கள் ஜாக்கிரதை” என்னும் கதையைத் தான் கூறினார். பிறகு என்னிடம் பேய் கதை இருக்கிறது என்று அவர் கூறியதும். அந்த கதை டெவலப் செய்து வர்ற பத்து நாள் அவகாசம் கொடுத்தேன்.
ஆனால் அவர் மூன்றே நாட்களில் கதை முடித்து வந்து என்னிடம் பேசினார். அவர் சொன்ன கதையில் இருந்ததை விட படத்தை பிரமாதமாக எடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றார்.