ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்
RATING : 3.2/5
சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்து வரும் வைபவுக்கு ஆதரவு இல்லத்திலிருந்து உதவி கேட்டு போன் கால் ஒன்று வர, நானே ஒரு அனாதைதாம்மா, எனக்கே வேலையில்லாம சுத்திக்கிட்டு இருக்கேன் என்று எதிர்முனையை பரிதாபப்பட வைக்கிறார்.
எதிர்முனையில் பேசிய குரல் மீண்டும் போனுக்கு வந்து ”சார் உங்க கஷ்டத்தை கேட்டு என் மனசு கேட்கல, உங்களுக்கு ஒரு வேலை பார்த்து வெச்சுருக்கேன். நாளைக்கு நேர்ல வாங்க” என்று அழைக்கிறது.
அந்த குரலில் மயங்கி கூப்பிட்ட இடத்துக்கு வைபவ் போனால் அது வேறு யாருமல்ல… நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தான். பார்த்தவுடன் அவர் மீது காதலில் விழ, வந்த இடத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மார்க்கெட்டிங் பொருட்களை அவரிடம் விற்பனைக்கு கொடுத்தனுப்புகிறது நிறுவனம்.
அப்படியே அப்பீட் ஆகிறவர் பொருட்களை சேட்டு கடையில் விற்று விடுகிறார். போன வைபவ் பொருட்களோடு திரும்பி வர வேண்டும், இல்லையென்றால் 40 லட்சம் ரூபாய் பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என்கிறார் நிறுவனத்தின் மேலாளர்.
அதே சேட்டு கடையில் தனது தங்க நகைகளை அடகு வைக்க ஐஸ்வர்யா ராஜேஷ் வர, அங்கு அவரிடம் மாட்டிக்கொள்ளும் வைபவ்வும் ‘ஐஸ்’ மீதான காதலில் விற்ற பொருட்களுக்கான பணத்தை திருப்பி கொடுத்து விட்டு அவர் பின்னாலேயே காதல் கிறக்கத்தில் சுற்றுகிறார்.
அந்த சுற்றலில் போது சாலையில் ஏற்படும் விபத்தொன்றில் இன்னொரு நாயகியான ஓவியா இறந்து விடுகிறார். அப்போது தெறித்து விழும் அவருடைய செல்போனை யாருக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு தன் வீட்டுக்கு வருகிறார் வைபவ்.
அதன்பிறகு அதிகரிக்கிறது காமெடி கலாட்டா.
”ஏண்டா, என் போனை திருடிட்டி வந்தே” என்று வைபவ் வீட்டில் ஆவியாக வந்து வைபவ்வின் காதலி ஐஸ்வர்யாவின் தலைமுடியை பிடித்துக் கொண்டு ஆக்ரோஷத்தோடு நிற்கிறார் ஓவியா. தன்னை காதலித்து ஏமாற்றி விட்டுப் போன கருணாகரனை என்னுடன் சேர்த்து வைத்தால் உன்னோட ஜோடி ஐஸ்வர்யா உனக்கு கிடைப்பார் என்கிறார்.
இரண்டு பேருக்கும் அவரவர் ஜோடி கிடைத்தார்களா? என்பதே ”கிச்சு கிச்சு” குறையாத கிளைமாக்ஸ்.
‘கப்பல்’ படத்துக்குப் பிறகு ஹீரோ வைபவ்வுக்கு மீண்டும் ஒரு காமெடி ஹாட்ரிக் ஹிட் என்று இந்தப் படத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். தர லோக்கல் இளைஞனாக வந்தாலும் அந்த பாஷைக்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ்கள் படத்தில் ஒர்க்-அவுட் ஆகியிருப்பது கனகச்சிதம்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் சாவுக்குத்தை முழுமையாக கற்றுக் கொண்டு வந்தால் நான் எனது தங்கச்சியை உனக்கு கட்டிக்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட, அதற்காக அவர் ட்ரெய்னிங் போய் விட்டு ‘காதலன்’ படம் பிரபுதேவா பாணியில் சாவுக்குத்துவின் விதவிதமான குத்துக்குகளை போட்டுத் தாக்க தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது. இனிமே இந்த மாதிரியான காமெடி சப்ஜெக்ட் தேடி வந்தா உட்றாதீங்க பாஸ்… உங்களுக்கு செமையா செட்டாகுது…
நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூட காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது குடும்பமே சாவுக்குத்து ஆடுகிற குடும்பம் என்று தெரிய வரும்போது செம ரகளை தான். அவரும் தன் பங்குக்கு ஒரு குத்தாட்டம் போட்டு தியேட்டரை விசில் சத்தத்தில் திணறடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனாக வரும் வி.டி.வி கணேஷை பார்த்தாலே கூடவே சிரிப்பும் வர ஆரம்பித்து விடுகிறது. அதிலும் சில காட்சிகளில் அவர் பேசும் டபுள் இல்லை இல்லை சிங்கிள் மீனிங் வசனங்களை போகிற போக்கில் வாசித்து விட்டுப் போக, பாஸிங்கில் போகும் அந்த வசனங்கள் கூட ஆபாசமாகத் தெரியாமல் சிரிப்புக்கு கேரண்டி தந்திருக்கிறது. அவரோடு சிங்கப்பூர் தீபன், யோகி பாபு என படத்தில் இருக்கிற அத்தனை காமெடி நடிகர்களையும் முழுமையாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு ரசிகர்களின் வயிற்றை சிரிக்க வைத்தே பதம் பார்க்கிறார்கள். யோகிபாபுவின் ”சாங் கம்போஸிங்” எல்லாம் நினைத்துப் பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியாத காட்சிகள்.
கொஞ்சமல்ல.., அதிகமான மேக்கப்புடனே பயமுறுத்துகிறார் ஓவியா. தொடை நடுங்கி டாக்டராக வரும் கருணாகரன் இரண்டாம் பாதியில் சில காட்சிகளே வந்தாலும் அதுவும் காமெடி தான்.
சித்தார்த் விபினின் பின்னணி இசை மிரட்டல் என்றால் தனது ப்ளாஸ்பேக்கை கருணாகரன் பாடல் மூலமாகச் சொல்லுவது மெலோடியிலும் காமெடி!
அதே வழக்கமான பேய், பிசாசு வகையறா படம் தான். ஆனா தியேட்டருக்குள்ள போனீங்கன்னா ரெண்டரை மணி நேரம் போதும் போதும்கிற அளவுக்கு குலுங்க குலுங்க சிரிக்க வெச்சுத்தான் அனுப்புறார் அறிமுக இயக்குநர் எஸ்.பாஸ்கர். ‘கமர்ஷியல் ஹிட் டைரக்டர்ஸ்’ ஏரியாவுல உங்களுக்கும் ஒரு ‘லேண்ட்’ கன்பார்ம் தலைவா!
ஹலோ நான் பேய் பேசுறேன் : காமெடி அன்லிமிடெட்!