‘இட்லி’யில் பாட்டிகளான சரண்யா, கோவை சரளா, கல்பனா

Get real time updates directly on you device, subscribe now.

idly

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன.

இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இன்பா ட்விங்கிள் லில்லி’ படமாக உருவாகி வருகிறது. இப்படத்தைச் சுருக்கமாக ‘இட்லி’ என்று கூறலாம்.

‘கதம் கதம்’ வெற்றிப் படத்தைத் தயாரித்த அப்பு மூவீஸ் தயாரிக்கிறது.

எப்போதும் பாட்டிகள் நடப்பு தொழில் நுட்பம் அறியாதவர்களாகவே இருப்பார்கள். அதுவே நசைச்சுவைக்கு நாற்றங்காலாகி இருக்கிறது.

”டெக்னாலஜி தெரியாத மூன்று பாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களின் பேத்திக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதிலிருந்து மீட்பதற்கு விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். இந்தக்கால டெக்னாலஜியை அவர்கள் பாணியில் பயன்படுத்தி எப்படிக் காப்பாற்றுகிறார்கள்? முடிவு என்ன என்பதே படம்.” என்கிறார் படத்தை இயக்கும் வித்யாதரன்.

இவர் தமிழில் சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’, கன்னடத்தில் உபேந்திரா நடித்த ‘நியூஸ்’ படங்களை இயக்கியவர்.

அந்த மூன்று பாட்டிகளில் இன்பாவாக தேசிய விருது பெற்ற சரண்யாவும், ட்விங்கிளாக நகைச்சுவை நாயகி கோவை சரளாவும் லில்லியாக காமெடி க்யூன் கல்பனாவும் நடிக்கிறார்கள்.இவர்களின் பெயர்களைச் சொல்லும் போதே சிரிப்பு அதிருதுல்ல.

பேத்தியாக நடிப்பவர் ‘சலீம்’ படத்தில் நடித்த அஸ்கிதா, மற்றும் ‘கத்தி’ அனுகிருஷ்ணா, மனோபாலா, சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, லொள்ளுசபா மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மாஃபியா கேங் லீடராக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கிறார். இப்படி நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே நடிக்கிறது.

படப்பிடிப்பு இம்மாதம் 6ம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.