கமல்ஹாசன், ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பிரஸ்மீட்!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக “இந்தியன் 2” டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது…
‘உயிரே உறவே வணக்கம். உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்திய 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது. இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது. ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2 மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி. சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார். நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என்றார்.
பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2 எனவும் மற்றும் தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியிடப்படுகிறது.