இன்னும் 50 வருஷம் கழிச்சி ‘டாஸ்மாக்’ எப்படி இருக்கும்? : அடேங்கப்பா… ‘டைம் மெஷின்’
”எப்படித்தான் இந்தாளு கதைகளை ஸ்கெட்ச் போட்டு செலெக்ட் பண்றாரோ…?” என்று சக தயாரிப்பாளர்களே பொறாமைப்படுகிற அளவுக்கு தரமான அதேசமயம் வெற்றிப் படங்களை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி பேங்க் வாசலில் கை கட்டி நிற்காமல் பட்ஜெட்டில் படமெடுத்து ஹிட்டோடு வசூலையும் அள்ளுவது தான் இவரது மாஸ்டர் ப்ளான்.
‘பீட்சா’வில் ஆரம்பித்து ‘எனக்குள் ஒருவன்’ வரை எந்தப் படமாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வித்தியாசமான கதைக்களத்தோடு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவிக்கின்றன.
இதோ திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், அவருடன் ‘ஸ்டூடியோ க்ரீன்’ கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படமான ‘இன்று நேற்று நாளை’ படமும் ஒரு வித்தியாசமான ‘டைம் மெஷின்’ என்கிற புது சமாச்சாரத்தோடு தான் ரிலீசாகப் போகிறது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார்.
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாய் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் ‘டைம் மெஷின்’ என்கிற விஷயம் தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏவி விட்டிருக்கிறது.
‘டைம் மெஷின்’கிறது ஒரு கால எந்திரம் மாதிரி. அது நம்ம கையில இருந்தா நம்ம எதிர்கால காதலியையும் பார்க்கலாம். கடந்த காலத்துக்குப் போய் காந்தி தாத்தாவையும் மீட் பண்ணலாம்.
அப்படிப்பட்ட அந்த டைம் மெஷின் ஹீரோ விஷ்ணு விஷால் – கருணாகரன் கையில கெடைக்கிறப்போ என்ன நடக்குதுங்கிறது தான் படத்தோட சுவாரஷ்யமே…? என்கிறார் இயக்குனர் ஆர். ரவிக்குமார்.
மேலும், ”இந்தப்படம் ரிலீசானா சயின்ஸைப் பத்தி மக்கள் அதிகம் தெரிஞ்சுக்கலாம். அதே சமயம் அது போரடிக்காமல் இருக்கிறதுக்கு சீரியஸா காட்சிகளை கொண்டு போகாம காமெடியாச் சொல்லிருக்கேன். அதனாலேயே படத்தோட எந்த சீன்லேயும் போர் என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.
சரி இதுவரைக்கும் சிவி.குமார் தயாரிச்ச படங்கள்லேயே இதுதான் அதிக பட்ஜெட்டுன்னு சொல்றாங்களே..? உண்மையா? என்கிற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர்
”இருக்கலாம். ஏன்னா…, இதுல வர்ற கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு ஒர்க் பண்ண டைம் மட்டுமில்லாமல் பணமும் நெறைய செலவாகியிருக்கு. அதுக்காகவே இந்தப்படத்துல ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் இணைஞ்சிருக்கு. ‘டைம் மெஷினி’ல் கடந்த காலத்துக்குப் போய் காந்தியை மீட் பண்றா மாதிரி ஒரு சீன் இருக்கு.
அதை படத்தோட சுவாரஷ்யத்துக்காக மட்டுமே சேர்த்தோமே தவிர மொத்தக் கதையும் அதை நோக்கி ட்ராவல் ஆகல. அதேமாதிரி இன்னும் 50 வருஷம் கழிச்சி சென்னை எப்படி இருக்கும்னு யோசிச்சி சீன் பண்ணிருக்கோம். அதுல எல்.ஐ.சி பில்டிங் எல்லாம் இன்னும் பல மாடிகள் உயர்ந்து பெருசா நிக்கும். அதைவிட ‘டாஸ்மாக்’ கடைகள் மாடிமேல மாடிகட்டி ரொம்ப உசரமான கட்டிடமா நின்னுக்கிட்டிருக்கும்!” என்றாரே பார்க்கலாம்.
அப்போ ரசிகர்களுக்கு ஒரு பக்கா விஷுவன் ட்ரீட் கன்பார்ம்!