தியேட்டர் ஸ்டிரைக்! வாங்கிய கடனை எப்படி அடைப்பேன்? : இவன் தந்திரன் இயக்குநர் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

ivan thanthiran

கெளதம் கார்த்தி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இந்தவார வெள்ளிக்கிழமை ரிலீசாகியிருக்கும் படம் ”இவன் தந்திரன்.”

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன்.

ஆனால் படம் ரிலீசாகி இரண்டு நாட்கள் கூட முடியாத நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும், தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்ந்திருப்பதால் தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதோடு அதில் 60 சதவீத தொகை அரசுகளுக்கு மட்டுமே சென்று விடும் நிலை ஏற்பட்டிருப்பதால் அதைக் கண்டித்து வரும் திங்கட்கிழமை முதல் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் காட்சிகளை ரத்து செய்து போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

அவர்களின் இந்த முடிவு இயக்குநர் ஆர். கண்ணனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் ஆர். கண்ணன் ஆடியோ பதிவு ஒன்றையும் இன்று வெளியிட்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த ஆடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

Related Posts
1 of 2

”அனைவருக்கும் வணக்கம். நான் டைரக்டர் ஆர்.கண்ணன் பேசுறேன். ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனர். இப்ப படம் ரிலீஸ் ஆகி, சக்சஸ் புல்லா போயிட்டிருக்கு. அதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு இயக்குனரா என் சகோதரர் பிரின்ஸ் உட்பட பலருக்கும் நன்றி. சில விஷயங்களை ஷேர் பண்ணலாம்னு ஆசைப்படறேன்.

வரும் திங்கட்கிழமை முதல் திடீர்னு ஸ்டிரைக்குன்னு சொல்றாங்க. எந்த முன்னறிவிப்பும் இல்லாம இப்படி திடீர்னு ஸ்டிரைக் அறிவிச்சா, எப்படி? இந்தப் படத்துக்காக வாங்குன கடனை எப்படி அடைக்கிறது? எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. விக்ரமன் சார், செல்வமணி சார், சேரன் சார், சமுத்திரக்கனி ஏதாவது பண்ணுங்க. யாருகிட்ட போய் பேசறதுன்னு தெரியல. மன்னிக்க வேண்டும். என்னால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை.

எனக்கிருக்கும் ஒரே ஆதரவு இயக்குநர்கள் சங்கம் மட்டும் தான். கிட்டதட்ட 25 வருடங்களாக இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையை, உடனே கழுத்தை அறுத்தால் என்ன வலி இருக்குமோ, அந்த வலியை உணர்கிறேன்.
ஒரு நல்ல திரைப்படத்துக்கு ஆதரவு தாருங்கள். தொடர்ச்சியாக திரையரங்குகளில் ஓடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று மன வேதனையுடன் பேசியிருக்கிறார்.

சினிமாக்காரங்களுக்கு நிம்மதியே இல்லை போலிருக்கு..?