திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினி, நாளை அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல் கொடுப்பாரா?’ : டி.ஆர் பாய்ச்சல்
500, 1000 ரூபாய் நோட்டுகளை மோடி தடை செய்த போது முந்திரிக் கொட்டையாட்டம் முதல் ஆளாக முந்திக்கொண்டு ஆதரித்து கருத்து தெரிவித்தவர் ரஜினிகாந்த்.
அதன் பிறகு தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகளை நடந்த போது எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகி விட்டார்.
சரி தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் தான் கருத்து சொல்ல வேண்டாம். அவ்வளவு பிரபலமானவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சொல்லப்படும் ஒருவர் தான் சார்ந்திருக்கும் திரைத்துறையினரைப் பாதிக்கக்கூடிய ஜி.எஸ்.டி வரி விவகாரத்திலாவது கருத்து தெரிவித்தால் என்ன? இதிலும் கூட மெளனமாக இருப்பவர் நாளை தமிழ்நாட்டுக்கு முதல்வரானால் மக்களுக்கு என்ன நன்மை செய்வார்? என்பது தான் பலரும் கேள்வியாக இருக்கிறது.
திரைத்துறையினருக்கு 28 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு சொன்ன போது அதை முதல் ஆளாக எதிர்த்தவர் கமல்ஹாசன். அரசின் இந்த வரி விதிப்பு திரையுலகை கடுமையாகப் பாதிக்கும் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் வரியைக் குறைக்கா விட்டால் நான் சினிமாவை விட்டே விலக வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
புதிய வரிக் கொள்கையில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரிகளால் திரையரங்க டிக்கெட் கட்டணங்கள் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்கும் போது
‘ஜிஎஸ்டி வரி குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை. என்று ரஜினி மீது பாய்ந்திருக்கிறார் டி.ராஜேந்தர். உங்களை வாழ வைத்த திரையுலகத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினி, நாளை அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல் கொடுப்பாரா?’ என்றும் அவர் ரஜினியை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.