படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் புரட்சி செய்த ‘ஜோக்கர்’ டைரக்டர்!
புரட்சி என்பது சிலருக்கு எழுத்தில் மட்டும் தான் வரும். அவர்களது நிஜ வாழ்க்கை சராசரி சமூக வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விடும்.
ஆனால் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என தமிழ்சினிமாவில் புரட்சிகரமான எழுத்துகளை திரைப்படங்களாக்கி வரும் இயக்குநர் ராஜுமுருகன் எழுத்து, காட்சி ஊடகம் ஆகியவற்றையும் தாண்டி தனது நிஜ வாழ்க்கையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆமாம், சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் நண்பியான ஹேமா சின்ஹாவை செப்டம்பர் 5-ம் தேதி ரகசியத் திருமணம் செய்திருக்கிறார்.
முதலில் குன்றத்தூர் முருகன் கோவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட திருமணம் பின்னர் திடீரென்று பெசன்ட் நகர் முருகன் கோவிலுக்கு மாற்றப்பட்டது.
அங்கு மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தை இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி ஆகியோர் முன் நின்று தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வாங்கிய ஹேமா சின்ஹா சில வருடங்களுக்கு முன்பு வரை சன் டிவியில் தொகுப்பாளினியாக வேலை செய்தவர்.
அது போக பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வந்த ஹேமா எழுத்தாளார் மனுஷ்யபுத்திரன் நடத்திய சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ராஜூமுருகன் வந்த போது தான் ஹேமாவுடன் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.
ஆனால் அந்தக் காதலுக்கு இருவரின் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு ஒருவரை திருமணம் செய்து சுவிஸ் நாட்டில் செட்டிலானார் ஹேமா. எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அவருக்கு இனிமையாக அமையவில்லை. இதனால் அந்தக் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக இருந்த ஹேமா மீண்டும் தனது காதலர் ராஜூ முருகனை திருமணம் செய்ய நினைத்திருக்கிறார். ராஜூமுருகனும் ஹேமாவை திருமணம் செய்ய சம்மதித்ததையடுத்து தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹேமாவை திருமணம் செய்திருக்கிறார்.
அதனால் இந்த திருமண விழாவில் ராஜூமுருகனின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. மாறாக நெருங்கிய நண்பர்கள், எழுத்தாளர்கள், திரையுலக பிரபலங்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.
வாழ்க்கையிலும் புரட்சி! வாழ்க மணமக்கள்!!