காடன்- விமர்சனம்
ஒரே நாளில் மூன்று மொழிகளில் வெளியாகி இருக்கும் படம் காடன். ( தமிழில் தான் காடன், தெலுங்கில் ஆரண்யா, ஹிந்தியில் புலிக்குட் சாம்ராட் ) யானைகள் நிறைந்த வனத்தின் வளங்களை கூறுபோட நினைக்கிறார்கள். ஒரு சாமியாரும் ஒரு மத்திய அமைச்சரும். திட்டமிட்டு வனத்தின் ஒரு பகுதியில் மிகப் பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்புகிறார்கள்.
அந்த காம்பவுண்ட் சுவர் அங்கு வாழும் யானைகளை பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் நுழைய வைக்கிறது. ஹீரோ அந்த யானைகள் மீது பெருங்காதல் கொண்டவர். அவர் மத்திய அமைச்சரை எதிர்த்து யானைகளின் வழித்தடத்தை எப்படி மீட்டுக் கொடுத்தார் என்பதுதான் கதை.
கொஞ்சம் பிசகினாலும் டாக்குமெண்டரி படமாக வேண்டிய கதையை, கமர்ஷியலாக வடிவமைத்திருக்கிறார், இயக்குநர் பிரபு சாலமன். ஒளிப்பதிவின் ஒவ்வொரு ஷாட்டிலும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ராஜி. வனப்பகுதிகளின் ஒலிக்கலவையை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஆஸ்கார் வென்று வந்த ரசூல் பூக்குட்டி.
ராணா, ஹீரோவாக ஒரு சைடு ஸ்கோர் செய்ய. கூடவே நம்மூர் விஷ்ணு விஷாலும் தன் பங்கை ஓரளவு செய்துள்ளார். ஒரு கும்கி யானையின் பாகனாக வரும் விஷ்ணு விஷால் கேரக்டர் மிக மிக மேலோட்டமாக இருக்கிறது.ஹீரோ ராணாவின் முகம் சில நேரம் அலுப்பைத் தருகிறது.. அடிக்கடி அவர் பிதாமகன் விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்துகிறார். தவிர்த்திருக்கலாம். ஆக்ரோசமான ஆக்க்ஷன் ப்ளாக்குகளில் ராணாவின் கடுமையான உழைப்பு தெரிகிறது.
படத்தில் ஆர்டிஸ்ட்ஸ் உள்பட டெக்னிஷியன்ஸ் என அனைவருமே நன்றாக உழைத்துள்ளார்கள். ஆனால் ஆழமில்லாத திரைக்கதை உழைப்பை எல்லாம் வீணாக்கி இருக்கிறது என்பதே உறுத்தும் உண்மை!
2.5/5