காலா விமர்சனம் #KaalaReview
RATING 3.8/5
நடித்தவர்கள் – ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹியூமா குரோஷி, சமுத்திரக்கனி, நானே படேகர் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – முரளி.ஜி
இசை – சந்தோஷ் நாராயணன்
இயக்கம் – பா.ரஞ்சித்
வகை – நாடகம், கிரைம்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி 46 நிமிடங்கள்
மாநகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரிலும், தொழில் வளர்ச்சி என்ற பெயரிலும் பூர்வ குடி மக்களை வெளியேற்றும் நிகழ்வுகளை ஆளும் அரசுகள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்ட திட்டங்களுக்காக குறி வைக்கப்படுவது குடிசை வாழ், அடித்தட்டு மக்களுடைய நிலங்கள் தான். இந்த பிக்கல் பிடுங்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் அரசியலை தோலுரித்துக் காட்டியிருக்கும் படம் தான் இந்த ‘காலா’.
மும்பையில் இருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை தன் கைக்குள் வைத்திருப்பவர் காலா சேட் என்கிற கரிகாலன்.
நகரின் மையப்பகுதியில் இருக்கும் அந்த குடிசைப் பகுதியால் மொத்த நகரத்தின் அழகே கெடுகிறது என்று நினைக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதியான நானா படேகர் ‘ப்யூர் மும்பை’ என்ற புதிய திட்டத்தின் மூலம் அந்தக் குடிசைப் பகுதியையும், அங்கு வசிக்கும் மக்களையும் காலி செய்து நிலத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்.
அவரின் திட்டத்தை தெரிந்து கொண்டு நிலம் எங்கள் உரிமை என்று மக்களோடு கரம் கோர்த்து களமிறங்கும் காலா ஜெயித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
பொதுவாக ரஜினி படம் என்றாலே கெத்தான எண்ட்ரி இருக்கும். ஆனால் இதில் அந்த மாதிரியான பில்டப் எண்ட்ரி இல்லாதது மனசுக்கு நிம்மதி. அதே சமயம் சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும், நானே படேகருடன் நேருக்கு நேர் வசனங்களைப் பேசும் போது தெறிக்கிற கோபமும், முறைப்பும், கம்பீரமும் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
இத்தனை வயசுக்குப் பிறகும் ரொமான்ஸ் காட்சிகளில் பார்க்கிற போது இளமை ரஜினியை அதே சுறுசுறுப்புடன் திரையில் கொண்டு வந்திருக்கிற விதம் செம க்யூட்.
தன்னுடைய கோட்டைக்குள் வந்துவிட்ட நானே படேகரை ரஜினி திருப்பி அனுப்புகிற காட்சி மிரட்டல் பிளஸ் மாஸ்!
ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹியூமா குரோஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் இளமையும், ரகளையுமாக கலந்து கட்டி அடிக்கிறது.
ரஜினியின் இன்னாள் மனவியாக வரும் ஈஸ்வரி ராவ் அக்மார்க் திருநெல்வேலி பெண்ணாக லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பதும், ஹியூமா தன் கணவரின் முன்னாள் காதலி என்று தெரிந்ததும், அப்போ நானும் என்னோட முன்னாள் காதலனைப் பார்க்கப் போறேன் என்று கிளம்புவதும் காமெடி கலாட்டா.
முகத்தில் வயது மூப்பின் ரேகைகள் தெரிந்தாலும் இந்த வயசிலும் ரஜினியிடம் இருக்கும் காமெடி சென்ஸ் ஒரு சதவீதம் கூட குறையவில்லை என்பதற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்படுகிற ரஜினி, அங்கு வந்திருக்கிற மினிஸ்டர் சாயாஜி ஷிண்டேவைப் பார்த்து, ‘ஆமா… குமாரு… இவரு யாரு’ என்று திரும்ப திரும்ப கேட்கிற காட்சியில் மொத்த தியேட்டரும் மனசு விட்டச் சிரிப்பில் குலுங்குகிறது.
சதா எந்த நேரமும் குடித்துக் கொண்டே இருக்கும் சமுத்திரக்கனி, ரஜினியின் மகன்களில் ஒருவராக வரும் திலீபன், மணிகண்டன், அவரது காதலி என படத்தில் வருகிற இன்னபிற கேரக்டர்களும் மனதில் பச்சக் என்று ஒட்டிங்!
நானே படேகர் நடிப்பில் பலே ஆள் என்று காட்சிக்கு காட்சி மிரட்டுகிறார். சைலண்ட் பட் பவர்புல்லான வில்லனத்தனத்தில் படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய பங்கு இவருடையது தான்.
”கடவுளுக்கு எத்தனையோ படைச்சிருக்கோம். இருந்தாலுன் ஒரே ஒரு குறை இருக்கு. அவன் தலையை கொண்டு வந்துடு.” என்று சிரித்துக் கொண்டே அவர் செய்யும் வில்லனத்தனம் ”வாவ்”.
பாடல் வரிகள் முழுமையாகப் புரியும் வண்ணன் தமிழ் இசையைக் கொடுத்திருக்கலாம் சந்தோஷ் நாராயணன். பாப், ராப் என கடுப்பேற்றுகிறார். பின்னணி இசையில் தப்பிக்கிறார்.
கேரளாவிலிருந்து கன்னியாகுமரி வழியாக ராமேஸ்வரம் வரும் ராமராஜ்யம் கூட்டம் தான் இந்த தேசத்தில் கொலைகாரக் கூட்டம் என்கிற கருத்தை கிளைமாக்ஸில் ராமன் – ராவணன் கதா கலாட்சேபத்தை வைத்து மிக அழகாகவும், துணிச்சலாகவும் திரையில் காட்சிப்படுத்தியிருக்கும் பா.ரஞ்சித்தின் துணிச்சலுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
படத்தின் ஆங்காங்கே தான் காட்ட நினைத்த அத்தனை அரசியல் குறியீடுகளையும் வைத்திருக்கிறார் ரஞ்சித். அவரது எண்ணத்துக்கு வலு சேர்ப்பது போல அவரோடு சேர்ந்து
”வெள்ளை தூய்மை கருப்பு அழுக்கு, என்ன ஒரு மோசமான எண்ணம்.”
”நிலம் எங்களுக்கு உரிமை, உனக்கு அதிகாரம்.”
”என்னோட நிலத்தை பறிக்கிறது தான் உன்னோட தர்மம், உன் கடவுளோட தர்மம்னா உன்னோட கடவுளைக் கூட எதிர்ப்பேன்.” போன்ற வசனங்களால் வலு சேர்த்திருக்கிறார்கள் மகிழ்நன், ஆதவன் தீட்சண்யாவும்.
ரஜினி என்கிற மாஸ் ஹீரோவை வைத்து நிகழ்கால சமூக அரசியலை துணிச்சலாகப் பேசியிருக்கிறார் பா.ரஞ்சித்!