கடாரம் கொண்டான் – விமர்சனம் #KadaramKondan
RATING – 3.5/5
‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம். செல்வா இயக்க கமல் தயாரிக்க விக்ரம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘கடாரம் கொண்டான்’.
பிரெஞ்சு மொழியில் வெளியான ‘பாயிண்ட் ப்ளாங்க்’ என்ற படத்தின் மூலக்கதையை எடுத்து அதற்கு தன் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா.
தொழில்நுட்ப ரீதியாக தெரியும் ஹாலிவுட் தனத்தை ரசிக்க முடிந்தாலும், மொத்தப் படமுமே எந்த மாதிரியான கதை என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
முழுக்கதையும் மலேசியாவில் தான் நடக்கிறது. கதைப்படி அங்குள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார் விக்ரம். அவரை தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி கர்ப்பிணி மனைவி அக்ஷரா ஹாசனை கடத்தி வைத்துக் கொண்டு டாக்டர் அபி ஹசனின் மிரட்டுகிறது ஒரு கடத்தல் கும்பல்.
தன் மனைவியை மீட்பதற்காக விக்ரமை மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு சேர்க்கச் செல்கிற வழியில் இன்னும் சில குறுக்கிட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
ஒரு பக்காவான ஆக்ஷன் – த்ரில்லர் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குனர். காட்சிக்கு காட்சி எந்தவித பாசாங்கும் இல்லாமல் திரைக்கதை அமைத்திருந்தாலும், சாமானிய ரசிகனுக்கு இந்தப்படம் எந்தளவுக்கு புரியும் என்பது கேள்வியாக இருக்கிறது.
காட்சிகளும் அதிகமில்லை, வசனங்களும் அதிகமில்லை, ஆனாலும் பார்வையாலும், ஆஜானுபாகுவான உடலமைப்பாலும் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார் விக்ரம். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலோ மிரட்டல்.
டாக்டராக அறிமுகமாகியிருக்கும் அபிஹசனுக்கு இந்தப்படம் ஒரு நல்ல ஒப்பனிங். கர்ப்பிணி மனைவியை மீட்க அவர் போராடும் பரிதவிப்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது மனைவியாக வரும் அக்ஷரா ஹாசனுக்கு ஆஹா பேஸ் பேஸ் என்று சொல்கிற அளவுக்கு நடிப்புக்கு தீனி இல்லை. இன்னும் கொஞ்சம் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் அவரையும் சிலாகித்திருக்கலாம்.
மலேசியாவின் பல மாடி கட்டிடங்களை ஏரியல் ஷாட்டுகள் மூலம் காட்டி பிரம்மாண்டத்தை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் ஆர். குதா. படம் ஆரம்பித்ததிலிருது ஒரு கேரக்டர் போலவே பயணிக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. இரண்டு பாடல்கள். இரண்டுமே இனிமை.
முதல் பாதியில் தெரியும் விறுவிறுப்பும், வேகமும் இரண்டாம் பாதியில் இழுவையாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காதில் பூ சுற்றுவது போல இருக்கிறது.
ஒரே ஜானர் படங்களைப் பார்த்து பார்த்து போரடித்து விட்டது என்று நினைக்கும் ரசிகர்களுக்கு தமிழில் ஒரு ஹாலிவுட் தர ஆக்ஷன் ட்ரீட் தான் இந்த ‘கடாரம் கொண்டான்’.