காதல் கசக்குதய்யா – விமர்சனம்

RATING : 2.5/5
பெரும்பாலான தமிழ்சினிமாக்களில் ஹீரோயின் பின்னால் தான் ஹீரோ சுற்றுவார், ஆனால் இதில் ஹீரோ பின்னால் தனது காதலுக்காக ஹீரோயின் சுற்றுகிறார்.
அப்படி தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஒரு இளைஞனுக்கு அதனால் வருகிற சிக்கல்கள் என்னென்ன என்பதைச் சொல்லும் படமே இந்த ‘காதல் கசக்குதய்யா.’
தனியார் கம்பெனி ஒன்றில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கும் ஹீரோ துருவா சிகரெட்டை ஊதித் தள்ளுகிற ஸ்டைலைப் பார்த்தே அவரை காதலிக்க முடிவு செய்கிறார் பிளஸ் டூ படிக்கும் ஹீரோயின் வெண்பா.
செல்போன் ரீசார்ஜ் செய்கிற கடையிலிருந்து துருவாவின் நம்பரைத் திருடி எடுத்து ”நான் உங்களை ரொம்ப நாளா பாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். நேர்ல சந்திக்கணும்” என்கிறார்.
நம்மையும் ஒரு பெண் விரும்புகிறதே என்கிற சந்தோஷத்தில் அடுத்த நாள் செம்மொழிப்பூங்காவில் காத்திருக்கும் துருவா ஹீரோயினைப் பார்த்ததும் அப்செட் ஆகிறார்.
ஆமாம், 6 அடி உயரமுள்ள துருவா முன்னால் ஸ்கூல் யூனிபார்மில் குள்ளமாக காட்சியளிக்கிறார் வெண்பா. மெச்சூரிட்டி இல்லை, வயசு வித்தியாசம், உயரம் வித்தியாசம் என சில காரணங்களை அடுக்கி வெண்பாவின் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் வெண்பா விடாமல் துரத்த வேறுவழியில்லாமல் அவரது காதலை ஏற்கிறார்.
வளரும் காதல் விவகாரம் வெண்பாவின் அப்பாவான சார்லிக்கு தெரிய வரவும் அவர் தாம் தூம் என்று குதிக்கிறார். இன்னொரு பக்கம் கோமாவில் கிடக்கும் தனது அம்மா கல்பனாவைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் துருவா. இந்த இரண்டுக்கும் நடுவே ”இந்தக் காதலே வேண்டாம்” என்கிற முடிவுக்கு வரும் துருவாவின் மனசை மாற்றி வெண்பா தனது காதலில் உறுதியாக நின்று ஜெயித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
துருவா பெயருக்கேற்றாற் போலவே துருதுருவென்று படம் முழுக்க வருகிறார். ஆனால் அதை ரசிக்க முடியாதபடி சதா எந்த நேரமும் சிகரெட்டை ஊதித்தள்ளிக் கொண்டே இருக்கிறார். அப்போதெல்லாம் திரையில் தெரிகிற புகைப்பழக்கம் கெடுதி பற்றி அறிவிப்புகளால் காட்சிகளை ரசிப்பதில் நமக்கு ஈடுபாடு குறைந்து விடுகிறது. அவரது உசரமான உடலைமைப்பு இது போன்ற காதல் கதைகளுக்கு செட்டாகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆக்ஷன் படங்களுக்கு செட்டாகும். அடுத்தடுத்த படங்களில் முயற்சித்துப் பாருங்கள்.
நாயகி வெண்பா ஏற்கனவே ராமின் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர். குமரியானதும் இதில் நாயகியாக களமிறங்கியிருக்கிறார். நடிப்பில் பல மடங்கு கியூட்னெஸ் காட்டுகிறார். பொதுவாக காதலை வெளிப்படுத்துவதில் ஆண்களை விட பெண்கள் தைரியமானவர்கள். அதிலும் பருவ வயது ள்ள பெண்களுக்கு துணிச்சல் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதை தனது கேரக்டர் வழியே சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்புள்ள அப்பாவாக வருகிறார் சார்லி. காட்சிகள் குறைவு என்றாலும் அனுபவ நடிப்பில் நிறைவைத் தருகிறார்.
பாசமுள்ள அம்மாவாக வரும் மறைந்த நடிகை கல்பனா நெகிழ்வான நடிப்பைத் தந்திருக்கிறார். ஒரு திறமையான நடிகையை திரையுலகம் இழந்து விட்டது என்பதே உண்மை.
காமெடிக்காக ஹீரோவின் இரண்டு நண்பர்கள் வள வளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சிரிப்புத்தான் வர மாட்டேன் என்கிறது.
மனசுக்குள் முணுமுணுக்க வைக்கும் பாடலாக ஒன்று கூட படத்தில் இல்லை. பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் இசையமைப்பாளர் தரண்.
‘மாலை நேரம்’ என்ற பெயரில் தான் எடுத்த ஒரு குறும்படத்தை தான் ரெண்டு மணி நேரத்துக்கு இழுஇழுவென்று இழுத்து திரைப்படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் துவாரக் ராஜா.
சரி அப்படியே படமாக்க முடிவு செய்து விட்டாலும் பெரிய திரைக்கே உரிய சில சுவாரஷ்யங்கள் வேண்டாமா? அவை திரைக்கதையின் எந்த இடத்திலும் இல்லை. மாறாக ஆமை வேகத்தில் நகரும் ‘ட்ராமா டைப்’ காட்சிகளால் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து எப்போது படம் முடியும் என்கிற எண்ணத்தை உண்டாக்கி விடுகிறது.
ஒரு அழகான ரொமான்டிக் படமாக வந்திருக்க வேண்டியது. மடுவை மலையாக்க ஆசைப்பட்டதால் கட்டியிழுத்த கயிறு மட்டும் கையோடு வந்திருக்கிறது.