கெளதமி விஷயத்தில் கமலுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
பல விழாக்களில் உலக நாயகனோடு ஜோடியாக கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கெளதமி.
ஆனால் சமீபத்தில் எந்தப் படங்களிலும் அவரை காண முடியவில்லை. அந்தக் குறையை ‘பாபநாசம்’ படத்தில் தீர்த்திருக்கிறார் கமல்.
‘உத்தமவில்லனை’ தொடர்ந்து உலக நாயகன் கமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பாபநாசம்’ படம் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்.
இதில் மீனா நடித்த கேரக்டரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெளதமி நடித்திருக்கிறார்.
குருதிப்புனல் வரை கமலுடன் பல வெற்றிகளைக் கண்டவரை மீண்டும் திரையில் பார்த்தபோது அப்படி ஒரு எனர்ஜி தெரிந்தது.
கமலும் அதையே தான் சொன்னார். ‘பாபநாசம்’ பிரஸ்மீட்டில் அவர் பேசிய போது :
”இந்தப் படத்தை ஏதோ நான் தனி ஆளாக நின்று நடத்தி கொடுத்தது போல எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சினிமா ஒரு ஜனரஞ்சகமான கலை மட்டுமல்ல. ஜனநாயகம் மிகுந்த கலையும் கூட. அதை தனியா ஒரு ஆள் செய்றதெல்லாம் நடக்காது. நட்சத்திர அந்தஸ்து எங்கள் மீது சுமத்தப்பட்டதால் ஏதோ ஒரு பாத்திரத்தை வைத்து சமைக்கும் சமையல் என்று நினைக்கிறார்கள். பல பாத்திரங்களைப் போட்டு செய்யும் சமையல் தான் சாப்பாட்டை சுவையுள்ளதாக ஆக்குகிறது. அப்படித்தான் இந்தப்படமும் செய்யப்பட்டது.
நான் எழுதி இயக்கும் படங்களில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடிப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இதில் நான் இயக்கவில்லை. அப்படி இருந்தும் எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள். அதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்தப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த அந்த காட்சிகளை போட்டுப்பார்த்தபோது எனக்கு ஒரு குற்ற உணர்வே இருந்தது. கெளதமி என்ற ஒரு நல்ல நடிகையை வீட்டில் போட்டு பூட்டி வைத்து விட்டோம் என்று. அவங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. பெர்சனல் ஈர்ப்பு இருக்கிறதுனால சொல்லல. ஒரு ரசிகனாக இருந்து சொல்கிறேன். இத்தனை நாள் நடிக்காமல் இருந்தது கூட நல்லதுக்குத்தான் என்று தோன்றுகிறது.
அவர் தள்ளி நின்று இருந்ததால் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்லா நடிக்கிறாங்க. என்றார் கமல்.
அப்போ இனிமே கெளதமியும் ஒரு ரவுண்டு வருவார்…!