கண்ணகி- விமர்சனம்
நான்கு நவீன கால யுவதிகளின் வாழ்வியலைப் பேசும் படம் கண்ணகி
ஒரு பெண்ணுக்கு வரும் மாப்பிள்ளைகளை தன் அம்மாவே தட்டிவிடுகிறார். ஒரு பெண் மணமாகுமுன்பே வயிற்றில் வாங்கிக்கொண்ட கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கிறார். இன்னொரு பெண் கணவன் தன் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டை பொய்யாக்கும் பொருட்டு போராடுகிறார். மற்றொரு பெண் திருமணத்திற்கு எதிரான மனநிலையில் இருக்கிறார். இந்த நான்கு பெண்கள் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் தான் படத்தின் கதை
அம்மாவால் வரன்கள் தட்டிவிடப்படும் பெண்ணாக அம்மு அபிராமி..தன் உருண்டு திரண்ட கண்களால் உணர்வுகளை கடத்துகிறார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பவதியான கேரக்டரில் கீர்த்தி பாண்டியன் தன் நடிப்பால் அக்கேரக்டரை பூர்த்தி செய்துள்ளார். கணவனை எதிர்த்து வழக்கை எதிர்கொள்ளும் கேரக்டரில் வித்யா பிரதீப் வித்தியாசமான நடிப்பை கொடுத்து ஆச்சர்யப்பட வைக்கிறார். ஸோயா ஷாலின் திருமண வாழ்வை வெறுக்கும் கேரக்டரில் பக்காவாகப் பொருந்திப் போகிறார்
ராம்ஜியின் ஒளிப்பதிவு வெவ்வேறு நிலப்பரப்புகளை அந்தந்த கதைகளுக்கு ஏற்றபடி காண்பித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஷான் ரஹ்மானின் இசை கதையை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக அமைந்துள்ளது
வித்தியாசமான ஒன்லைனைப் பிடித்த இயக்குநர் முன்பாதி வரை திரைக்கதையில் புகுந்து விளையாடியுள்ளார். தமிழ்சினிமாவிற்கு சமீபகாலமாக என்ன நேர்ந்ததோ.. பின்பாதியில் தான் பலரும் சொதப்புகிறார்கள். இந்தக் கண்ணகியும் பின்பாதியில் நம்மை வசீகரிக்க சற்று திணறுகிறது. பின்பாதி படத்திற்கு கிரியேட்டிவ் டீம் இன்னும் உழைப்பைப் போட்டிருந்தால் கண்ணகி நம் கண்களை கொள்ளை கொண்டிருப்பாள்
2.75/5