கதகளி – விமர்சனம்
RATING : 3.2/5
சம்பாவை போட்டுத் தள்ளியது யார்?
இந்த ஒற்றை வரி கேள்விக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து விடை சொல்வது தான் ‘கதகளி’.
எங்களைப் பார்த்தா ஏதோ சாப்ட் கேரக்டர் தான் எல்லோரும் நெனைச்சுக்கிறாங்க… நாங்களும் ஆக்ஷன் அவதாரம் எடுப்போம் என்பதை ரசிக கண்மணிகளுக்கு காட்டுவதற்காகவே ஆக்ஷன் பேக்ட்ராப்பில் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் ‘பசங்க’ இயக்குநர் பாண்டிராஜ்.
கடலூரில் மீனவர் சங்கத் தலைவராக இருக்கும் தம்பா வைத்தது தான் சட்டம். இங்க மேலே பறக்கிற பருந்தா இருந்தாலும் அது நானா தான் இருப்பேன் என்று திமிர் காட்டுகிற அளவுக்கு அளப்பறையைக் கொடுக்கிறார்.
அவரை கூலிப்படை ஒன்று ஸ்கெட்ச் போட்டு தூக்கி விட, பழி ஏற்கனவே அவரோடு பழைய பகையில் இருக்கும் விஷால் மற்றும் அவரது அண்ணன் மைம் கோபி மீது விழுகிறது.
விஷாலோ தனது காதலி கேத்ரீன் தெரசாவை நான்கு நாட்களில் திருமணம் செய்யத் தயாராகி வருகிறார்.
கோபத்தில் தம்பாவின் ஆட்கள் விஷால் குடும்பத்தை கூண்டோடு காலி பண்ண கடலூர் முழுக்க தேடி அலைய, மொத்த குடும்பமும் ஒரு காரில் கடலூரை சுற்றி சுற்றி வருகிறது.
செய்யாத கொலைப்பழியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? தனது குடும்பத்தை அந்த கொலைவெறி கும்பலிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
விஷாலுக்கு இதுபோன்ற கேரக்டர் எல்லாம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி… பிச்சி உதறியிருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்பதை காண்பிக்க முடியை கொஞ்சம் கட்டிங் செய்து கொண்டு, எப்போது பார்த்தாலும் ஹேண்ட் சானிடைசைரை கைகளில் தடவிக் கொள்கிறார்.
சென்னைக்கு ஒரு மாதம் போய் விட்டு ஊருக்கு வருபவர்கள் சென்னை பாஷயைப் பேசி பவுசு காட்டுவது போல இவர் இங்கிலீஷில் பேசி செய்யும் கூத்தை பல ஊர்களில் பாரீன் ரிட்டர்ன் செய்யும் கூத்து தான். அதை அப்படியே ஸ்க்ரீனில் காட்டியிருக்கிறார்கள்.
அண்ணனான வரும் மைம்கோபி குடும்பத்தை ரவுடிக் கும்பலிடமிருந்து காப்பாற்றுவதற்காக காரில் சுற்றி சுற்றி வருவது பரிதாபம். படத்துக்குப் படம் தேர்ந்த நடிகராக மிளிர்கிறார்.
தம்பாவாக வரும் மதூசூதனனும், அந்த கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று சீன் போடுபவரும் பார்வையாலேயே மிரட்டுகிறார்கள்.
ராங்காலில் லல்வாகும் கேத்ரீனா தெரசாவுக்கும், விஷாலுக்கும் இடையிலான காதல் காட்சிகள் காமெடி கலந்த சுவாரஷ்யமாக்கியிருப்பது இளமை கொண்டாட்டம்.
ஓரே ஒரு கொலை அதைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் என்று அதை நோக்கியே திரைக்கதை நகர்வதால் சில சோர்வுக் காட்சிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டு போட்டிருக்கலாம்.
‘ஹிப் ஹாப்’ தமிழாவின் இசையில் பின்னணி இசையும், பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகளும் வசீகரம்!
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் திரைக்கதை வேகம் எடுக்கிறது.
தம்பாவை போட்டுத் தள்ளியது யாராக இருக்கும்? என சீனுக்கு சீன் ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்க கிளைமாக்ஸில் வருகிறது யாருமே எதிர்பார்க்காத
‘பரபர’ ட்விஸ்ட்!
கதகளி – ‘தெறி’ ஆட்டம்