கதாநாயகன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

kathanayagan-review

RATING : 3/5

ருத்தெல்லாம் சொல்லல… வாங்க ரெண்டு மணி நேரம் பார்த்து ரசிச்சி வயிறு வலிக்க சிரிச்சிட்டுப் போங்க என்கிற டைப்பில் வந்திருக்கும் படம் தான் இந்த ‘கதாநாயகன்.’

சிறு வயது நண்பரான சூரியுடன் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்யும் ஹீரோ விஷ்ணு விஷால். இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவருக்கு சாலையோ கடக்கவோ, கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை கண்டால் தட்டிக்கேட்கவோ தைரியமில்லாதவர்.

அந்த அப்பாவித்தனம் பிடித்துப் போய் தன்னை பின்னாலேயே துரத்தும் அவரின் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார் ஹீரோயின் கேத்ரீன் தெரசா. காதலியை திருமணம் செய்ய பெண் கேட்டு தன் குடும்பத்தோடு அவருடைய வீட்டுக்குச் செல்கிறார் விஷ்ணு விஷால்.

ஆனால் கேத்ரீன் அப்பா நட்ராஜோ ‘நான் ஒரு ஆம்பளைக்குத் தான் என் மகளை கட்டிக் கொடுப்பேன். ஒரு கோழைக்கு கட்டித்தர மாட்டேன் ’ என்று பெண் தர மறுத்து விடுகிறார்.

இதனால் அவமானத்தில் கூனிக்குறுகும் விஷ்ணு விஷால் ‘கதாநாயகன்’ ரேஞ்சில் தனது தைரியத்தையும், துணிச்சலையும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் வெளிக்காட்டி காதலியை எப்படி கரம் பிடிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

கதாநாயகன் என்கிற டைட்டிலுக்கு ஏற்ற ஹீரோவாக நடிப்பிலும், டான்ஸூலும் படம் முழுக்க முன்னேற்றம் காட்டியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

சாலையைக் கடக்க பயப்படுவது, வில்லன் கோஷ்டியைக் கண்டதும் தெறித்து ஓடுவது என எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிற ஹீரோ. அதே சமயம் மாமனார் தன்னை அவமானப்படுத்தி விட்டாரே? என்கிற கோபத்தில் சரக்கை போட்டு விட்டு திடீர் தைரியமும், துணிச்சலும் வந்தவராக பாரில் வில்லன் கோஷ்டியை புரட்டியெடுக்கும் போது ஆக்‌ஷன் ஹீரோவாகவும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கேத்ரீன் உடனான காதல் காட்சிகளில் அசடு வழிகிற முகபாவங்களில் கவனிக்க வைத்திருக்கிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷனாக வந்த சூரி இதில் விஷ்ணுவுடன் கை கோர்த்திருக்கிறார். தன் காதலிக்கு லவ் மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு சூரிக்கு அனுப்பி விஷ்ணு டேமோ பார்க்க அதை தப்பாக நினைத்து சூரியின் மனைவி அவரை நையப்புடைத்து எடுப்பதும், கிளைமாக்ஸில் நண்பனுக்காக கிட்னியை இழந்து விட்டு அவர் படுகிற அவதிகளுமாக தியேட்டரே கொல் சிரிப்பில் அதிர்கிறது.

Related Posts
1 of 47

ஹீரோயின் கேர்தீன் தெரசா தேனில் ஊற வைத்த பழாச்சுழை போட அழகுப்பதுமையாக வருகிறார். நடிப்பதற்கான ஸ்கோப் குறைவு என்றாலும் வருகிற காட்சிகளில் எல்லாம் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறார். அவருடைய தோழியாக வரும் ‘காதல் கண் கட்டுதே’ நாயகி அதுல்யாவுக்கு பாராட்டிச் சொல்லும் படி எந்த சீனும் இல்லை.

முதல் 20 நிமிடக் காட்சிகள் ரொம்ப ஸ்லோவாகச் சென்றாலும் அதன்பிறகு வேகமெடுக்கும் திரைக்கதையால் கிளைமாக்ஸ் வரை ‘கிச்சு கிச்சு’ தான்.

கெஸ்ட் ரோல் என்றாலும் வருகிற சில நிமிடக் காட்சிகளில் விசில் சத்தங்களையும், கை தட்டல்களையும் வாங்கிச் செல்கிறார் விஜய் சேதுபதி.

துபாய் ஷேக்காக வரும் ஆனந்தராஜ் காமெடியில் கதகளி ஆடியிருக்கிறார். கிட்னிக்காக காத்திருக்கும் அவர் அதை கொடுப்பதற்காக வரும் விஷ்ணுவின் உடம்பில் கிட்னி இருக்கும் ஏரியாவை தொட்டு அக்கறையோடு பார்த்துக் கொள்ளச் சொல்வதும், ஆபரேஷன் சமயத்தில் விஷ்ணு கிடைக்கவில்லை என்றதும் அவருக்குப் பதில் சூரியின் கிட்னியை லாவிச்செல்வதுமாக மனுஷன் வருகிற சீன்களில் செம டைமிங்சென்ஸ்.

திருமணத்தில் மேடைக்கச்சேரி பாடகராக வரும் மொட்டை ராஜேந்திரனும் தன் பங்குக்கு காமெடியில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். அதிலும் அந்த மாய நதியினில் பாடலைப் பாடுவாரே..? எப்போது நினைத்தாலும் சிரிக்கலாம்.

”அநியாயத்தை தட்டி கேட்கிறது மட்டும் வீரமில்லை, அதற்காக அடி வாங்குறதும் கூட வீரம் தான்” போன்ற ஆகஷன் படங்களுக்குரிய வசனங்களை இந்த மாதிரி காமெடிப் படத்தில் புகுத்தியிருப்பது சிறப்பு.

கேத்ரீன் அப்பாவாக வரும் நட்ராஜ், விஷ்ணுவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மீராகிருஷ்ணன் என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் தங்கள் நடிப்பை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெ.லக்‌ஷமணின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கலர்புல் ட்ரீட். ஷான் ரோல்டனின் இசையில் ‘தினமும் உன் நெனப்பு, டப்பு டிப்பு’ பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தின் பெயர் கதாநாயகன். படத்தில் வில்லன்களும் இருக்கிறார்கள். ஆனால் ஹீரோ விஷ்ணு விஷால் முதல் வில்லன் அருள்தாஸ் வரை அத்தனை பேரையும் காமெடியனாக்கி முழு நீள காமெடிப்படத்தை தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தா. முருகானந்தம்.

ஆனால் நிஜத்தில் நல்ல காமெடி சென்ஸ் உள்ள முருகானந்தம் திரைக்கதையில் அந்தத் திறமையை முழுமையாகப் பயன்படுத்தவில்லையோ என்கிற கேள்வியும் சில காட்சிகளைப் பார்க்கும் போது எழாமல் இல்லை. அதையும் தாண்டி முகம் சுளிக்க வைப்பது மாதிரியான ஆபாசம், வன்முறை கலந்த எந்தக் காட்சியும் இல்லை. அந்த பொறுப்புணர்வுக்காகவே இந்த கதாநாயகனின் காமெடியை குடும்பத்தோடு சென்று ரசிக்கலாம்!