காத்திருப்போர் பட்டியல் – விமர்சனம்
RATING – 2.5
நடித்தவர்கள் – சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், அப்புக்குட்டி மற்றும் பலர்
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு – எம்.சுகுமார்
இயக்கம் – பாலையா டி. ராஜசேகர்
வகை – காமெடி, நாடகம்
சென்சார் பரிந்துரை – ‘U’
கால அளவு – 1 மணி நேரம் 53 நிமிடங்கள்
வேறொருவனுக்கு மனவியாகப் போகிற சுழலில் இருக்கும் தன் காதலியை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டுமென்று துடிக்கிற ஹீரோ. அதற்காக ட்ரெயினில் ஏறி கிளம்புகிற நேரத்தில் சந்தேகக் கேசில் பிடித்துச் செல்கிறார் ரயில்வே போலீசான அருள்தாஸ்.
மாலை 4 மணிக்குள் காதலியை சந்திக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழலில் போலீசின் காவலிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்? காதலி நந்திதா ஸ்வேதாவை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றும் ஹீரோ, வேலைக்குப் போகிற ஹீரோயின் நந்திதா ஸ்வேதா அவர்கள் இருவருக்குமிடையே ஏற்படுகிற மோதல், அதில் ஆரம்பிக்கிற காதல் என தமிழ்சினிமாவில் நாம் பார்த்து ரசித்த நூத்துச் சொச்சம் படங்களில் ஒன்று தான் இந்தப் படத்தின் கதையும்.
ஆனால் அதன் பின்னணியில் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்களிடையே கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் சுடுவதற்கு மேலதிகாரிகளில் உத்தரவே தேவையில்லை என்கிற எக்ஸ்ட்ரா தகுதியை வைத்திருக்கும் நமக்கு கிடைப்பதில்லையே என்கிற ஒரு ரெயில்வே போலீஸ் அதிகாரியின் ஆதங்கத்தை காட்சிப்படுத்தியிருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், காமெடியாகவும் இருக்கும்.
எப்படி ஒரு அறிமுக ஹீரோவுக்கு லவ் பாய் கேரக்டர் கிடைக்குமோ அப்படி ஒரு கேரக்டரில் தான் ஹீரோயின் நந்திதாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் சச்சின் மணி. முதல் படம் போல தெரியாத வண்ணம் நடிப்பில் எந்த இடத்திலும் தடுமாற்றமில்லை. அதற்காக ஒரு சண்டைக்காட்சியைக் கூட அவருக்கு கொடுக்காமல் விட்டதில் நியாயமில்லை.
ஹீரோயின் நந்திதா ஸ்வேதா சச்சின் மணியை முறைப்பது, பின்பு காதலிப்பது என எந்தத் திருப்பங்களும் அவருடைய கேரக்டரில் இல்லை. அதோடு இந்தப்படத்தில் முந்தைய படங்களை விட ஒருசுற்றுப் பெருத்துப் போய் தெரிகிறார். உடம்பை கொஞ்சம் குறைங்க ஸ்வேதா.
பல படங்களில் முரட்டு ஆசாமியாக வந்த அருள்தாஸ் இதில் படம் முழுக்க முறைப்பு போலீசாக விறைப்போடு வருகிறார். அவருக்கே உரிய அக்மார்க் மாடுலேஷன்களுடன் ரயில்வே போலீசை யாருமே மதிப்பதில்லையே என்கிற கோபத்தை அவர் முகத்தில் வெளிப்படுத்துகிற விதம் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸில் எல்லோரையும் தப்பிக்க விட்டுவிட்டு ஏமாந்த சோனகிரியாக நிற்பது பரிதாபம். படத்தைப் பார்ப்பவர்களுக்கு செமக் காமெடி!
ஹீரோ சச்சின் மணியுடன் சக கைதிகளாக வரும் அப்புகுட்டி, அருண்ராஜா காமராஜா, செக்ஸ் டாக்டராக வரும் மனோபாலா, டைரக்டராக வரும் செண்ட்ராயன் ஆகியோரில் சசிகுமாரின் ரசிகராக வரும் அருண்ராஜா காமாராஜா மட்டும் சிரிக்க வைக்கிறார்.
‘பவர் பாண்டி’ படத்தில் மென்மையான இசையைக் கொடுத்தவரின் இசையா இது? என்று சந்தேகப்பட்டு கேட்க வைத்திருக்கிறார் ஷான் ரோல்டன். மனதில் நிற்கும் பாடல்கள் என்று எதுவுமில்லை. பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
பாண்டிச்சேரி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு ஞாபகத்துக்கு வருகிறது.
ரயில்வே பின்னணியைக் கொண்ட படங்களைப் போல் இல்லாமல் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மனக்குமுறலை வெளிப்படுத்தக் கூடிய வித்தியாசமான கதைக்களம் தான்.
இருந்தாலும் ஒன்றிரெண்டு காட்சிகளிலாவது திருப்பங்களையோ, புதுமைகளையோ, வைத்திருந்தால் இனிமையான ரயில் பயணமாக அமைந்திருக்கும்.