காவல்துறை உங்கள் நண்பன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தப்படத்தின் டைட்டில் போலவே காவல்துறை இருக்க வேண்டும் என்பதை வேறோர்மொழியில் பேசியிருக்கும் படம் தான் காவல்துறை உங்கள் நண்பன் சுரேஷ்ரவி படத்தின் ஹீரோ. அவர் படத்தின் தயாரிப்பாளராகவும் இருப்பதால் ஒருவித பதட்டத்தோடே நடித்துள்ளார். அவரின் சாமானியக் கேரக்டருக்கு அந்த நடிப்பு பொருத்தமாகவே இருக்கிறது. நடிகை ரவீனாரவி மனதில் நிற்கும்படியான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக இருக்கிறார் மைம்கோபி. அவரின் மிரட்டும் விழிகளும் அதட்டும் குரலும் நிஜமாகவே மிரட்டுகிறது. சூப்பர்குட் லட்சுமணன் கதாப்பாத்திரத்தில் எதார்த்தம் இருக்கிறது..ரைட் படத்தின் கதை?

ஒரு சாதாரணன் போலீஸ்டேசன் போனால் அங்கிருக்கும் ஈகோ வெறிபிடித்த காக்கி அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் என்பது தான் படத்தின் ஒன்லைன். ஹீரோவிற்கு வெளிநாடு சென்று தன் மனைவியை மகிழ்வித்து கெளரவமாக வாழும் அளவில் வசதியாக வேண்டும் என்பது கனவு. அந்தக் கனவுக்கு குறுக்கே வருகிறார் போலீஸ் மைம்கோபி. முடிவில் ஹீரோவின் லட்சியம் வென்றதா? போலீஸின் ஈகோ வென்றதா என்பதே மீதிக்கதை

கதை என்னவோ காத்திரமானது தான். அதைச்சொன்ன விதத்தில் ஒருசார்புத் தன்மை இருப்பதாகவே படுகிறது. முழுக்க முழுக்க காவல்துறை என்றாலே பயந்து அலறியடிக்கும் அளவில் காவல்துறை மீதான கோபத்தை காட்சிகளின் வழியே கொட்டியுள்ளார் இயக்குநர். அந்த விசயங்களைப் பேசினாலும். .காவல்துறையின் அதிகாரத்தை அடக்க பொதுஜனத்திற்கும் சட்டரீதியான வழிகள் உண்டு என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கலாம். முடிவில் அறம் மீதும் போராட்டம் மீதும் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சில விசயங்களைச் சேர்த்திருக்கலாம்.

படத்தின் இசை ஒளிப்பதிவு இரண்டுமே தரமான செய்கைகள். திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் கருத்தியலிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கை குலுக்கிப் பாராட்டியிருக்கலாம். இப்போது சமூக இடைவெளி விட்டுத் தான் படத்தை ரசிக்க முடிகிறது
3/5