நான் கூட ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்! – சீனியர் இயக்குநரின் கிண்டல் பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Related Posts
1 of 3

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ஆர்.வி உதயகுமார் தற்போதைய தமிழ்நாட்டில் அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார்…

“இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார்.

இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகி விட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.

கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.