”நமக்கு யாருமே இல்லேன்னு நெனைக்காதீங்க..” – மன்சூர் அலிகானுக்காக களம் இறங்கிய சிம்பு!

Get real time updates directly on you device, subscribe now.

பொதுவாக முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்கள் எந்த சமூகப் பிரச்சனையாக இருந்தாலும் அதைப்பற்றி பொதுவெளியில் எந்தக் கருத்தும் சொல்லத் துணிவதில்லை.

ஒரு சிலர் மட்டுமே கருத்து சொல்லுவார்கள். அதுவும் கூட பட்டும் படாமலும் தான் இருக்கும். ஆனால் சமீபகாலமாக இளம் முன்னணி ஹீரோக்கள் பலரும் நாட்டில் நடக்கும் அத்தனை சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் துணிந்து கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள்.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷ், ஆரி, விஜய் சேதுபதி என சினிமாவில் இருக்கும் இளம் ஹீரோக்கள் தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளில் தங்கள் தரப்பு கருத்துகளை பொது வெளியில் துணிச்சலோடு வைத்து வருகிறார்கள்.

இப்படி எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வாய் மூடி மெளனியாக இருக்கும் சிம்புவும் கடந்த சில மாதங்களாக பொது வெளியில் தனது கருத்துகளை எடுத்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் காவிரி பிரச்சனையில் கர்நாடக மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக ஆளுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று கன்னட மக்கள் பலரும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அவருடைய கருத்துக்கு ஆதரவு கொடுத்தனர்.

Related Posts
1 of 35

இந்த நிலையில் அதே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக சீமானும் கைது செய்யப்பட்டார்.

அவரை விடுவிக்கக் கோரி ஊடகங்கள் மத்தியில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் சில கருத்துகளை முன் வைத்தார். இதனால் அந்தக் கருத்துகளை பேசியதற்காக மன்சூர் அலிகானை போலீசார் சிறையில் அடைத்தனர்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சீமான், பாரதிராஜா, வைரமுத்து, அமீர் என திரையுலகினர் பலரும் வெளியே வந்து விட்ட நிலையில் மன்சூர் அலிகான் மட்டும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையிலும் அவரை விடுவிக்க யாருமே முயற்சி எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் சிம்புவின் காதுகளை எட்டிய நிலையில் பதறிப் போனவர் மன்சூர் அலிகான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டார். அதனால் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை வைத்தார்.

மேலும், நமக்கு யாருமே இல்லேன்னு யாரும் நெனைக்காதீங்க, மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற எல்லோருக்கும் யாராவது உதவி செய்ய வருவார்கள். மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

யாருமே மன்சூருக்கு ஆதரவாக பேச முன் வராத நிலையில் சிம்புவின் இந்த மனிதாபிமான செயல்பாட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள்.