கோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்
RATING : 2.3/5
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றி கொடுத்த களிப்பில் மீண்டும் ஆர்.பார்த்திபன் இயக்குநராக களமிறங்கியிருக்கும் படம் தான் இந்த ”கோடிட்ட இடங்களை நிரப்புக.”
கொஞ்சம் ட்விஸ்ட், கொஞ்சம் சிரிப்பு, நெறைய டபுள் மீனிங் என முகச்சுழிப்புக்கு முழுமையாக இடம் கொடுத்திருக்கிறார்.
ட்ராவல்ஸ் கம்பெனி ஒன்றில் ட்ரைவராக வேலை செய்யும் பார்த்திபன் சைடில் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருக்கிறார். அவரிடம் அமெரிக்காவிலிருந்து ஒரு பெரிய சொத்து டீலை முடிப்பதற்காக சென்னை வரும் ஹீரோ சாந்தனு அறிமுகமாகிறார்.
வந்தவருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதை காட்டிலும் ஃஹோம்லி செட்டப்பில் ஒரு வீடு இருந்தால் ஓ.கே என்பதை அறிந்து தான் தங்கியிருக்கும் ஒரு பங்களாவிலேயே தங்க வைக்கிறார் பார்த்திபன். அதே பங்களாவில் ஹீரோயின் பார்வதி நாயரும் தங்கியிருப்பதைப் பார்க்கும் சாந்தனு அவரைப் பார்த்தவுடனே மனசை பறிகொடுக்கிறார்.
திருமணம் செய்தால் அவரைத்தான் செய்ய வேண்டுமென்கிற முடிவில் இருக்கிற சாந்தனுவுக்கு பிறகு தான் அது பார்த்திபனின் மனைவி என்கிற விஷயம் தெரிய வருகிறது.
இருந்தாலும் பார்வதி நாயருக்கும், பார்த்திபனுக்கும் இடையிலான அதிகப்படியான வயசு வித்தியாசம் காரணமாக ஏற்பட்டிருக்கும் இடைவெளியில் சாந்தனு தைரியமாக நுழைகிறார். ஆனால் கிளைமாக்ஸில் வெறோரு ட்விஸ்ட்டை வைத்து தனக்கே உரிய குசும்புத்தனத்துடன் படத்தை முடித்திருக்கிறார் பார்த்திபன்.
ஹீரோவாக வரும் சாந்தனுவுக்கு நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது. அமைதியான நடிப்பிலும், பார்வதி நாயர் மீது மெல்ல மெல்ல காதல் வயப்படுகிற காட்சியிலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவள் பார்த்திபனின் மனைவி என்கிற உண்மை தெரிய வரும் போது முகத்தில் காட்டுகிற அதிர்ச்சியும், அவரை மறக்க முடியாத போது காட்டுகிற தவிப்பும் என அழகழகான உணர்ச்சிகள் முகத்தில் முழுமையாக வெளிப்படுகின்றன. டான்ஸில் கேட்கவே வேண்டாம். பாடல் காட்சிகளில் தனியாக ஸ்கோர் செய்கிறார்.
ஹீரோயினாக வரும் பார்வதி நாயர் செவத்த தோள் பெண்ணாகவும், கிளைமாக்ஸில் பார்த்திபன் சொல்லும் கேரக்டருக்கு பொருத்தமானவராகவும் செட்டாகியிருக்கிறார். அதே சமயம் வசீகரம் இல்லாத அவரது முகத்தை சில நொடிகளுக்கு மேல் கண் கொண்டு பார்க்க முடியவில்லை என்பது உண்மை. லட்டு லட்டா ஹீரோயின்கள் சான்ஸ் கெடைக்காம இருக்கிறப்போ அதுங்க எல்லாம் பார்த்திபன் கண்ணுல எப்படி சிக்காம போனாங்க?
ஞாபகமறதிகாரராக வரும் தம்பி ராமையா அவ்வப்போது காமெடியில் சிரிக்க வைக்கிறார். அமெரிக்காவிலிருந்து சாந்தனுவுடன் போனில் பேசுகிற சில காட்சிகளில் தலை காட்டுகிறார் சிம்ரன். அவருடைய கால்ஷூட்டே அவ்வளவு தான் போல.
படத்தில் எப்படி ஒரு கஞ்சப் பேர்வழியாக வருகிறாரோ? அதுபோலவே எண்ணி ஐந்தே ஐந்து கேரக்டரை வைத்து ஒரு முழுப்படத்தையும் பங்களாவுக்குள்ளேயே கஞ்சத்தனத்தோடு நகர்த்தியிருக்கிறார் பார்த்திபன்.
அர்ஜீன் ஜனாவின் ஒளிப்பதிவும், ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பும் குறை சொல்ல முடியாத நேர்த்தி. சத்யாவின் இசையில் பாடல்களில் எந்த ஈர்ப்பும் இல்லை.
”நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் இருக்கும் சின்ன இடைவெளிதான் தர்மம்” ”எந்தா சேச்சி முல்லைப்பூ தந்த மாதிரி, முல்லைப் பெரியாறையும் தந்தா தேவலை” ”சம்பாதிக்கிறதெல்லாம் நாப்பது வயசுக்குள்ள சம்பாதிச்சிருங்கன்னு ரஜினி பாடியிருக்காரு. பாடி அவர் மட்டுமே சம்பாதிக்கிறாரு” என படத்தில் வருகிற வசனங்கள் பார்த்திபனுக்கே உரிய குசும்புடனும், குறும்புடனும் ரசிக்க வைக்கின்றன.
படத்தை எப்படியாவது கமர்ஷியலாக ஓட வைத்து காசு பார்த்து விட வேண்டுமென்கிற ஆசையில் ”நான் இருக்குற லட்சணுத் துல செல்ப் எடுக்கறதே கஷ்டம். இதுல செல்பி எங்க எடுக்கறது?” என படம் முழுக்க பச்சை பச்சையான டபுள் மீனிங் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் பார்த்திபன்.
இப்போதுள்ள இளைஞர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். வித்தியாசமான, புதுமையான கதையம்சமுள்ள படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். என்னுடைய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றி தான் இந்தப்படத்தையும் என்னை இயக்கத் தூண்டியது என்று ரிலீசுக்கு முன்பு சொன்ன பார்த்திபன் படத்தில் தனது ட்ரேட்மார்க் புதுமையுடன் கூடிய புத்திசாலித்தனத்தை தொலைத்து விட்டு ரசிகர்களின் மேம்பட்ட ரசனைக்கு ஒரு பிட்டு படம் ரேஞ்சிலான கிழிசல் படத்தை கொடுத்து அவர்களின் நவதூவாரங்களையும் கிழிந்து தொங்க விட்டிருக்கிறார்.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ – இது போன்ற இடங்களை நிரப்புவது பார்த்திபனின் புதுமைக்கு அழகல்ல!