பேய் சீஸன் இன்னும் முடியல… : செப்டம்பர் 17 ல் மிரட்ட வருகிறாள் ‘கோப்பெருந்தேவி’!
தமிழ்சினிமா இப்போது பேய்களுக்கும், பிசாசுகளுக்கும் வசியமாகி இருக்கிறது. அந்த வரிசையில் தயாராகியிருக்கும் ஒரு புதிய பேய் படம், ‘கோப்பெருந்தேவி.’
சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.எம்.பிரசாந்த் இசையமைத்துள்ளர் . இதில் கோவைசரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமிநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்ளிட்ட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள் . இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய முதல் படம் இதுவே. ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது எனும் விஷயம் தெரியாமல் அவர்கள் அந்த பேயிடம் மாட்டி என்னவெல்லாம் சின்னபின்னமாகிறார்கள் என்பதை நகைச்சுவையுடனும், பயமுறுத்தும் விதத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கே படத்தின் பெரும்பகுதி செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான இந்தப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 17- தேதி ரிலீசாகிறது.