விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்ட மிஷ்கின்!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது,
“’கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். இயக்குநர் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தது போல இந்தப் படம் இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது காலில் விழுந்து முத்தமிட தயாராக இருக்கிறேன். அதற்கடுத்து வினோத்தின் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை புரோமோட் செய்ய நிர்வாணமாக நடனம் ஆட வேண்டும் என்றாலும் தயார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ’கொட்டுக்காளி’ படம் அவனுக்கு மற்றுமொரு குழந்தை. விஜய்சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். காமெடியனாக இருந்து அசுர நாயகனாக வளர்ந்து வரும் சூரியைப் பார்க்க பிரம்மிப்பாக உள்ளது.படத்தில் கதாநாயகி அன்னா பென் ஒன்றரை வார்த்தைத்தான் பேசியிருப்பார். ஆனால், நிச்சயம் அவரது நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும். சத்தமே இல்லாமல் பெரிய அரசியல் கருத்துடன் ‘கொட்டுக்காளி’ உருவாகி இருக்கிறது” என்றார்.