சென்னை போனதும் மாற்றிப் பேசுகிறார்! : ‘ஹிப் ஹாப்’ ஆதி மீது கோவைப் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு
உலகமே வியந்து உற்று நோக்கிய ஜல்லிக்கட்டுக்கு எதிரான அறப்போராட்டம் காவல்துறை கையில் லத்தியை எடுத்ததால் வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்திருக்கிறது.
இந்த அசம்பாவித சம்பவங்களுக்கு பலர் காரணமாகச் சொல்லப்பட்டாலும், இந்த வன்முறை அரங்கேறுவதற்கு முன்பாக இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ ஆதி தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட ஒரு வீடியோவும் முக்கிய காரணம் என்று போராட்டக்காரர்களால் குற்றம் சுமத்தப்படுகிறது.
”கோவையில் நான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சில ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்தன. அதனால் நான் போராட்டக்களத்திலிருந்து விலகி விட்டேன்” என்று போராட்டம் பற்றி வீடியோ ஒன்றின் மூலமாக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் இசையமைப்பாளர் ஆதி.
ஆனால் இப்போது ஆதியின் பின்னால் இருந்தது யார்? அவர் ஏன் மோடி எதிர்ப்பு கோஷங்களை கண்டு பயந்தார் என்பதற்குரிய பரபரப்பான உண்மைகளை கூறியிருக்கிறார் கோவையைச்ச் சேர்ந்த இளம் பெண் அகிலா.
இதுகுறித்து ‘புதிய தலைமுறை’யில் நேற்று பேசிய அகிலா ‘ஹிப் ஹாப்’ ஆதி கோவையில இருந்து கெளம்புறதுக்கு முன்னால ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுல ‘கோவை மக்கள் ரொம்ப அழகா போராடுறாங்க’, ‘ரொம்ப அமைதியா போராடுறாங்க’. அதைப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்னு சொன்னார்.
கோவையில இருந்து கெளம்பும் போது அப்படிச் சொன்ன ஆதி சென்னைக்கு வந்து இறங்கின உடனே மாத்திப் பேசுறார். இது என்ன நியாயம்?
கோவையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் சில விஷயங்கள் நடந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் எல்லோரும் களத்துல நின்னாங்க சார்.
கோவையில் நடந்த சம்பவத்துக்கு ஆதி வைத்த குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்கிறேன்.
மோடி எதிர்ப்பைப் பத்தியும், நாட்டுக்கு எதிரான விஷயங்களையும், மத ரீதியான பிரச்சனைகளையும் பேசினாங்கன்னு சொன்னார்.
ஆனால் ஆதி அமர்ந்திருந்த மேடைக்கு அருகிலேயே பி.ஜேபி தொண்டர்கள் அமர்ந்திருந்தார்கள். பி.ஜே.பி ஆதரவாளர்கள் யார் யார் என்கிற விபரம் எனக்குத் தெரியும். அவர்கள் ஆதியின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தான் ஆதியும் இருந்தார். அதற்காகவே அவர் மோடி எதிர்ப்பைப் பற்றி வீடியோவில் குற்றம் சொல்லியிருக்கலாம்’ என்றார் அகிலா.
அகிலா சொல்வதை வைத்துப் பார்க்கும் போது மோடிக்கு எதிரான கோஷங்களை நிறுத்தச் சொல்லி ஆதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமோ? அந்த அழுத்தத்தினால் தான் அவர் போராட்டக்களத்திலிருந்து வெளியேறியிருப்பாரோ? என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள்.