மொட்டை மாடியில் டார்ச் லைட் அடித்து கொண்டாடுவோம்! : சிம்பு பாணியில் அழைக்கும் ராகவா லாரன்ஸ்

Get real time updates directly on you device, subscribe now.

lawrence-1

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன் வீட்டு முன்னால் பத்து நிமிடங்கள் அமைதியாக நிற்கப்போகிறேன். என்னைப்போலவே எல்லோரும் அதே நேரத்தில் அமைதியாக தாங்கள் வீடுகள், அலுவலகங்கள் அல்லது எந்த இடத்தில் இருந்தாலும் பத்து நிமிடங்கள் அமைதியாக நின்று போராடும்படி தனது ரசிகர்களுக்கு நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் நடிகர் சிம்பு.

இப்போது அதே நூதன பாணியில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாட அழைத்திருக்கிறார் நடிகர் லாரன்ஸ்.

இதுகுறித்து லாரன்ஸ் மேலும் கூறியிருப்பதாவது : நமது பாரம்பரிய விளையாட்டான சல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து,அந்த சந்தோசத்தை வெற்றிவிழாவாக மாணவர்கள்,இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசைதான்!!

அலங்காநல்லூரில் நடைபெற்ற சல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.

பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40பேராக குறைத்துக்கொண்டு அலங்காநல்லூர் சென்றோம்.

அலங்காநல்லூரில் இடப்பற்றாக்குறைக்காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர் மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஊர் மக்கள் மீது எந்த தவறும் இல்லை. ஊர்மக்களின் அளவுகடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

இம்மாபெரும் சல்லிகட்டு நிகழ்ச்சியை காணமுடியவில்லை என்று பல மாணவர்களும் இளைஞர்களும் வருத்தப்பட்டார்கள். கண் கலங்கியும் விட்டார்கள். அதனால் நானும் அவர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.

மாணவர்களும் ,இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது .அவர்களது வருத்ததை போக்க இச்சல்லிகட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18 ஆம் நாள் அன்று வெற்றியை கொண்டாடலாம் என்று கூறினேன் அவர்களும் சம்மதித்தனர்.அப்போது அவர்கள் முகம் மெரினாவில் எழுந்த அலைபேசியின் வெளிச்சத்தைபோல் ஒளிர்ந்தது.

Related Posts
1 of 18

அதனால் இத்திருநாளை வெற்றி விழாவாக எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம் என நாம் முடிவெடுப்போம்.

நமது சந்தோசக் களம் மெரினாதான் என்றாலும் இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதாலும் மாணவர்கள்,இளைஞர்களுடன் கேக் வெட்டி ஏதாவது ஒரு இடத்தில் ஒன்றுகூடி கொண்டாட உள்ளோம்.

மற்ற அனைவரையும் இணைப்பது என்பது சிரமம் என்பதால் உலகத்தமிழர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே கொண்டாடுங்கள்.

கூலித்தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் என சல்லிகட்டுக்காக குரலெழுப்பிய அனைவரும் இதை வெற்றியாக கொண்டாடுவோம்!!

நினைத்ததை சாதித்தோம் !!! சாதித்ததை வரலாறாக மாற்ற கொண்டாடுவோம்!!!

வரும் பிப்ரவரி 18 ஆம் நாள் மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ,உங்கள் அலைபேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.

இதை நமது கலச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக… உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் பிப்ரவரி 18 மாலை 7 மணி கொண்டாட்டதை மறவாதீர்கள்!!!

இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.