குற்றம் 23 – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

kuttram

RATING : 3.5/5

கோடம்பாக்கத்தில் காக்கி கதைகளுக்கு பஞ்சமிருப்பதில்லை. ஆனால் இதுவும் ஷேம் ப்ளட் தான் என்கிற ஃபார்முலாவிலிருந்து முழுவதுமாக விலகி ஒரு பக்காவான மெடிக்கல் த்ரில்லராக யதார்த்தப் படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது இந்த ”குற்றம் 23.”

பாதிரியார் மற்றும் ஒரு இளம்பெண் என சர்ச் ஒன்றில் நடக்கும் இரட்டைக் கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் ஹீரோ அருண்விஜய்.

தனது விசாரணையை முடுக்கி விடுகிற போது தான் அதன் பின்னணியில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் சிலர் அடுத்தடுத்து இறந்து போகிற அதிர்ச்சித் தகவல் கிடைக்கிறது.

அதே முறையில் தனது அண்ணியும் தற்கொலை செய்து கொள்ள, அது தற்கொலையா? கொலையா? என்கிற கோணத்தில் விசாரணையை வேகப்படுத்தி அதன் ஆரம்பப்ப் புள்ளியை நெருங்கும் போது வெளிவரும் உண்மைகள் பேரதிர்ச்சிகள்!

அது என்ன என்பதை நீங்களே திரையில் பார்ப்பது தான் கூடுதல் சுவாரஷ்யம்.

காசுக்காக எந்த லெவலுக்கும் கார்ப்பரேட் கும்பல் இறங்கி தங்களது மனிதாபமானத்தை அடகு வைக்கும் போல? அடப்பாவிகளா..?

”என்னை அறிந்தால்” படத்துக்குப் பிறகு தேடி வந்த அத்தனை பட வாய்ப்புகளையும் உதறி விட்டு, இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த ‘விக்டர்’ அருண் விஜய்க்கு ஒரு ‘விக்டரி’ கிடைத்திருக்கிறது.

வெல்டன் பிரதர்!

பக்கம் பக்கமாக பஞ்ச் பேசுகிற வசனங்கள் இல்லை. வில்லனுக்கு சவால் விடுகிற ஆக்ரோஷமான காட்டுக் கத்தல்கள் போன்ற இம்சைகள் இல்லை. ஆனாலும் போலீசுக்கே உரிய கச்சிதமான உடலமைப்பிலும், ஆக்‌ஷன் சீன்களிலும் கம்பீரத்தை இம்மியளவும் குறையாமல் காட்டுகிறார் அருண்விஜய்.

மகிமா உடனான அவரது காதல் எபிசோட் ஒரு மெல்லிசை போல… லேசாக இருந்தாலும் வெரி நைஸ் அப்ரோச்.

இதுவரை நடித்த படங்களில் ஸ்கூல் யூனிபார்மிலேயே பார்த்து விட்ட மகிமா இதில் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறார்.

மேக்கப்பே இல்லாத முகத்தில் கோபத்திலும் தெரிக்கிறது இயல்பான அழகு! அதுவரை தன்னை விசாரிக்க வரும் அருண்விஜய்யிடம் எறிந்து எறிந்து விழுவதும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று சொன்னதும் முகத்தில் சட்டென்று வெளிப்படுகிற மெல்லிய புன்னகை கோடிட்டுக் காட்ட வேண்டிய எக்ஸ்பிரஷன்கள்.

சீரியஷான காட்சி ஒன்றில் கூட தம்பி ராமையா பேசுகிற வசனங்களை இடைஞ்சலாக எடுத்துக் கொள்ளாமல் கொள்ளென சிரிக்க முடிகிறது.

அண்ணியாக வரும் அபிநயா, அவரது கணவராக வரும் அமித் பார்கவ் இருவரின் நடிப்பும் மன நிறைவு.

பாடல்கள் மனசுக்குள் நிற்கவில்லை என்றாலும் ஒரு மெடிக்கல் த்ரில்லருக்குரிய ‘தடக்’ ‘தடக்’ பின்னணி இசையில் முழுமையாகக் கொடுத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். கே.எஸ்.பாஸ்கரின் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பும் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம்.

மருத்துவத் துறையில் நடக்கிற எல்லா அக்கிரமங்களுக்கும் யார் காரணம்? என்கிற முடிவுக்கு ரசிகர்களே வந்து விடுகிற நேரத்தில் தடாலென்று திரைக்கதையின் போக்கையே மாற்றி டாக்டர்களுக்கு ‘புனிதர் பட்டம்’ கொடுத்து விடுகிறார் இயக்குநர் அறிவழகன்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை திரைப்படமாக்க சில மாற்றங்களைச் செய்து ”பெற்றுக் கொள்வதில் மட்டுமல்ல… தத்தெடுத்துக் கொள்வதிலும் இருக்கிறது தாய்மை..” போன்ற பெண்மையை பெருமைப்படுத்துகிற அர்த்தமுள்ள வசனங்கள் கைதட்டல்களை அள்ளிக் கொள்கின்றன.

மருத்துவத் துறையில் செண்டிமெண்ட் ஏரியாவான குழந்தைப் பிறப்பில் நடக்கிற அக்கிரமத்தை கதையாக்கி, அதற்கு த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பைக் கலந்து ஒரு பக்காவான ஆக்‌ஷன் ப்ளஸ் விழிப்புணர்வுப் படமாகத் தந்திருக்கும் இயக்குநர் அறிவழகனுக்கு பாராட்டுகளில் பெரும்பங்கு உரித்தாகுக.

குற்றம் 23 – பார்த்தே தீர வேண்டிய ‘குற்றமில்லா’ படம்!