7 நாட்கள் – விமர்சனம்
RATING 2.5/5
ஒரு கொலை தொடர்பாக 7 நாட்களில் நடக்கும் விசாரணையில் சம்பந்தமே இல்லாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் நாயகனும், நாயகியும் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரான ”7 நாட்கள்.”
முதல்வரையே மிரட்டுகிற அளவுக்கு சமூகத்தில் செல்வாக்குள்ள பிரபல தனியார் டிவி சேனலின் உரிமையாளர் பிரபுவுக்கு ராஜுவ் கோவிந்த பிள்ளை சொந்த மகன். கணேஷ் வெங்கட்ராம் வளர்ப்பு மகன் என இரண்டு மகன்கள்.
இதில் சொந்தப்பிள்ளையான ராஜூவ் ஒரு இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஒரு சம்பவத்தில் மகன் சிக்கினால் நம் பேர், புகழ், கெளரவம் எல்லாம் என்னாவது என்று கவலைப்படும் பிரபு எப்படியாவது மகனை அதிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.
அதற்கு வளர்ப்பு மகனான சைபர் கிரைம் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராம் உதவியை நாடுகிறார். ”கவலைப்படாதீங்கப்பா எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லும் கணேஷ் வெங்கட்ராம் ரேடியோ ஜாக்கியான சக்தி வாசுவையும், சேனல் நிருபரான நிகிஷா பட்டேலையும் அந்த கொலை வழக்கில் நேக்காக சிக்க வைக்கிறார்.
செய்யாத குற்றத்துக்காக இருவரையும் போலீஸ் துரத்த, அந்த கொலைப்பழியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வசம் கிடைக்கும் டிவிடி, மற்றும் கடித ஆதாரங்களை வைத்து கொலைப் பழியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.
ஹீரோவாக வரும் சக்தி வாசுவுக்கு இப்படி ஒரு படத்தில் செமத்தியான இரண்டு சண்டைக் காட்சிகளையாவது கொடுத்திருக்கலாம் டைரக்டர். ஆனால் ஏனோ ஒரு சாதாரண மிடில் கிளாஸ் இளைஞராக மட்டுமே வருகிறார்… பல காட்சிகளில் ஓடுகிறார்… ஓடுகிறார்… ஓடிக்கொண்டே இருக்கிறார்…
நாயகியாக வரும் நிகிஷா பட்டேல் பாடல் காட்சிகளில் கவர்ச்சியை வாரி இறைக்க, மற்ற காட்சிகளிலோ முகம் முழுக்க மேக்கப்பை வாரி அப்பியிருக்கிறார். சக்தி வாசுவுக்கும், இவருக்குமான ரொமான்ஸ் காட்சி ஒன்று கூட இல்லாதது பெருங்குறை.
சைபர் கிரைம் ஆபீசராக சால்ட் – அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வரும் கணேஷ் வெங்கட் ராமின் நடிப்பில் வழக்கத்தை விட வித்தியாசம்!
குணச்சித்திரக் கேரக்டரில் நடிக்க பிரபுவுக்கு சொல்லியாத் தர வேண்டும், தொழிலதிபராகவும், அதே சமயத்தில் மகன்கள் மீது பாசம் வைக்கிற நெகிழ்வான அப்பாவாகவும் கவர்கிறார்.
காமெடி செய்ய எம்எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் என இருவர் இருந்தும் சிரிக்கும்படியான காமெடிகாட்சி தான் இல்லை. நல்லவேளையாக படத்தில் வருகிற நாய்க்கு நடிகர் வி.எஸ்.ராகவனின் பின்னணிக் குரலைக் கொடுத்து அந்தக் குறையைப் போக்கியிருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபுவின் காஸ்ட்லியான ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
கொலையாளி யார் என்கிற சஸ்பென்ஸை உடைக்காமல் திரைக்கதையை கிளைமாக்ஸ் வரை நகர்த்திக் கொண்டு சென்றதில் கொஞ்சம் நம் பொறுமையை சோதிக்கவும் செய்து, கொஞ்சம் ரசிக்கவும் வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கௌதம் விஆர்.
7 நாட்கள் – பொறுமை அவசியம்!