லால் சலாம்- விமர்சனம்
மத நல்லிணக்கத்தை கிரிஞ்ச் டைப் சினிமாவாக எடுத்தால் அதுதான் லால் சலாம்
1990-களில் கதை துவங்குகிறது. இந்து முஸ்லீம் ஒன்றாக வாழும் ஒரு ஊர். அங்கு மத ரீதியான கலவரத்தை கிரிக்கெட் விளையாட்டு மூலமாக ஏற்படுத்த நினைக்கிறார்கள் அரசியல் புள்ளிகள். அதற்கு விஷ்ணு விஷால், விக்ராந்த் எல்லாம் துணை போகும் சூழல் வருகிறது. அச்சூழலுக்குள் சுழன்று ரஜினி எப்படி மதம் சார்ந்த கலவரம் வராமல் தடுத்தார்? என்பதே படத்தின் கதை
மும்பையில் பெரிய பிஸ்னெஸ் மேன், ஆனால் ஊரின் வேரை மறக்காத நல்லிணக்க வாதியாக வருகிறார் ரஜினிகாந்த். மகன் போட்டோவோடு கிரிக்கெட் விளையாடும் காட்சி ஒன்றில் ரஜினி நடிப்பு முத்திரை. ஆக்சன் காட்சிகளில் அவரை ஈடுபடுத்தாமல் தவிர்த்திருக்கலாம். தம்பி ராமையா விவேக் பிரசன்னா இருவரும் நல்ல ஸ்கோரிங் ஆக்டர்ஸ். விஷ்ணு விஷால் விக்ராந்த் இருவருக்கும் நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை.
ஏ.ஆர் ரகுமான் தான் இசை அமைத்தாரா? என்று கேட்கும் அளவில் இருக்கிறது இசையெனும் இரைச்சல். பாடல்களும் வொர்க் ஆகவில்லை. சினிமாட்டோகிராபி இன்னுமே பெட்டராக இருந்திருக்கலாம். எடிட்டரை பாவம் எனச் சொல்லுவதா? இல்லை எடிட்டரால் நாம் தான் பாவம் ஆகிவிட்டோமா? எனக் குழப்பம்.. எடிட்டிங்கில் அவ்ளோ குழப்பம்
எந்தத் தேவையும் இல்லாத போது நான் லீனியரில் கதை சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா. அதுவே படம் பார்க்கும் ரசிகனின் பொறுமையைச் சோதிக்கிறது. இடைவேளைக்குப் பின் படத்தில் பேசப்பட்ட விசயங்கள் ஒகே என்றாலும் தமிழ்சினிமா அடித்துத் துவைத்துப் போட்ட அரதப்பழசான மேட்டர் அவை. எப்படிப் பார்த்தாலும் லால் சலாம் நம்மை ஏமாற்றியே இருக்கிறது
2/5