ஒரிஜினல் புலியுடன் நடித்த புகழ்!
ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். ஜூ கீப்பர்’. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்னையில் புதன்கிழமை (பிப்ரவரி 7) இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் புகழ் பேசியதாவது…
தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன், இலை எடுத்திருக்கிறேன், இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி. இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரின் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக இசை அமைத்ததற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்.