முந்தா நாளு “கல்யாணம்…”, மூணே நாள்ல “சீமந்தம்”! : பாடலாசிரியருக்கு கிடைத்த புதிய அனுபவம்!

Get real time updates directly on you device, subscribe now.

murugan

முதலில் கல்யாணம், உடனடியாகவே சீமந்தம் என்றால் யாருக்குத்தான் சந்தோசமாக இருக்காது. பாடலாசிரியர் முருகன் மந்திரம், சந்தோசம் தாண்டி கொண்டாட்டம் என்றே இதை சொல்கிறார்.

விரைவில் பாடல்கள் வெளியாக உள்ள சாரல், மற்றும் சும்மாவே ஆடுவோம் படங்களில் இடம் பெற்றுள்ள முருகன் மந்திரத்தின் இரண்டு பாடல்கள் தான் அந்த கொண்டாட்டத்துக்கு காரணம்.

“’சாரல்’ படத்தில் அசத்தலான ஒரு கல்யாணப் பாடல் எழுதும் வாய்ப்பும் அதைத் தொடர்ந்து சும்மாவே ஆடுவோம் படத்தில் அழகான ஒரு சீமந்தப்பாடல் எழுதவும் வாய்ப்பும் கிடைத்தது, அடுத்தடுத்து யதார்த்தமாக நடந்த நிகழ்வுகள்.

சாரல் படத்திற்கு இசை, இஷான் தேவ். மலையாளம் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இஷான் தேவ் தமிழில் இசையமைத்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ‘சாரல்’. அசார், பிரியங்கா, நடிப்பில் டிஆர்எல் இயக்கத்தில் நிகில் மேத்யூ, சோனியா, ராஜேஷ் ராஜ் பாடியுள்ள “ரோஜாப் பூப்போல பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை” எனத் தொடங்கும் கல்யாணப் பாடலில் பல்லவியில்….

அடி ஆசை மரிக்கொழுந்தே
அத்தை பெத்த மல்லிகையே
மாமன் மனசுக்குள்ள
கப்பல் விடுங்க

அட மீசை முறுக்கிக்கிட்டு
முந்தானையை கட்டிக்கிட்டு
முழுசா விடிஞ்ச பின்னும்
காலில் கெடங்க

இப்படி வரிகள் அமைந்தது. எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என்று நம்புகிறேன். (முழுப்பாடலின் வரிகள் செய்தியின் கடைசியில்….)

கல்யாணப் பாடல் எழுதி பதிவாகி ஒரு வாரம் ஆகவில்லை. நண்பர் காதல் சுகுமார் அழைத்தார். அவர் இயக்கும் “சும்மாவே ஆடுவோம்” படத்திற்கான பாடல்கள் எழுதும் வாய்ப்பை தந்தார். பத்து வருடங்களுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு ஜமீன் தம்பதி. நிறைய வேண்டுதல்களுக்கு பின் ஜமீன் மனைவி கருத்தரிக்கிறார். அந்த சீமந்த விழாவை ஊர் மக்கள் கூடி கொண்டாடி மகிழ்கிறார்கள். இதுதான் பாடலுக்கான சூழல். இப்போது தான் ஒரு கல்யாணப்பாடல் எழுதினோம். உடனே ஒரு சீமந்தப்பாடல் எழுதும் வாய்ப்பு என்று குஷியாகிவிட்டேன் நான். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, செம கலகலப்பாக மெட்டு போட்டிருந்தார். ஒரு திருவிழாப் பாட்டுக்கு போட்டது போல இருந்தது அந்த மெட்டு. “மகராசிக்கு சீமந்தம்” என்று தொடங்கும் அந்தப் பாடலை மாணிக்கவிநாயகம் மற்றும் மகிழினி மணிமாறன் பாடி இருக்கிறார்கள்.

அம்மன்சாமி சிலையழகு
எங்க அம்மாபோல யாரழகு
பிள்ளை சுமக்கும் தாயழகு
என்றும் அதுதான் பெண்மைக்கு பேரழகு

என்று பாடலின் ஒரு சரணத்தில் வரிகள் எழுதியதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. பாடலை கேட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்தப் பாட்டு இனிமேல் எல்லா சீமந்த நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும். ஏனெனில் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சீமந்தப்பாடல்கள் இல்லை. எனவே இந்தப்பாடல் பெரிய வரவேற்பைப் பெறும் என பாராட்டுகிறார்கள். பாடல் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் காதல் சுகுமார், மற்றும் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அனைவருக்கும் நன்றி சொல்வதோடு, அந்த பாராட்டுக்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”

சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், காவு, ஒன்றா இரண்டா, வெள்ளை நிலா பல படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் முருகன் மந்திரம்.

சீமந்தப் பாடல் வரிகள் (சும்மாவே ஆடுவோம். இசை: ஸ்ரீகாந்த் தேவா)

பல்லவி

மகராசிக்கு சீமந்தம்
ஊர் மக்களுக்கெல்லாம் ஆனந்தம்

ஊரே கூடி வாழ்த்திடுவோம்
வெள்ளி ஊஞ்சலைக்கட்டி ஆட்டிடுவோம்
வானவில்ல கொண்டு வந்து
ஒரு வளையல் செஞ்சி மாட்டிடுவோம்

பல்லாண்டு நீ வாழணும்
நூறாண்டு நீ வாழணும்
ஊர்போற்ற நீ வாழணும் – அம்மா
ஓம்புள்ள உலகாளணும்.

சரணம் 1

ஆரிராரோ பாடிடணும்
அந்த முப்பத்து முக்கோடி தேவர்களும்
வெள்ளிநிலா நட்சத்திரம்
எங்க பிள்ளைக்கு வெளையாட தந்திடணும்

அம்மன்சாமி செலையழகு
எங்க அம்மாபோல யாரழகு
பிள்ளை சுமக்கும் தாயழகு
என்றும் அதுதான் பெண்மைக்கு பேரழகு

அம்மா அம்மா
நீதான்
எங்க வீட்டுக்கு வௌக்கெத்தும் தெய்வம்அம்மா

பல்லாண்டு நீ வாழணும்
நூறாண்டு நீ வாழணும்
ஊர்போற்ற நீ வாழணும் – அம்மா
ஓம்புள்ள உலகாளணும்.

சரணம் 2

சாமிபோல ஊரையெல்லாம்
நீதானே நீதானே காத்திடணும்
வானம் போல அய்யா உங்க மனசு
வாழ்கின்ற நாளெல்லாம் வணங்கிடுவோம்

எட்டுப்பட்டி ஊருசனம்
தொட்டுவணங்கும் தெய்வமகன்
ஊரு உலகம் போற்றிடவே
உனக்கு பிறப்பான் சிங்கமகன்

அய்யா அய்யா
வாழ்க
எங்க குலசாமி குலசாமி நீங்க தான்யா

பல்லாண்டு நீ வாழணும்
நூறாண்டு நீ வாழணும்
ஊர்போற்ற நீ வாழணும் – அம்மா
ஓம்புள்ள உலகாளணும்.

கல்யாணப் பாடல் வரிகள் (படம்: சாரல், இசை: இஷான் தேவ்)

பல்லவி

ரோஜாப் பூப்போல
பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை
ஜோரா வந்து நின்னாராம்.

ராஜா வீட்டுக்கு
ராணி போல தேவதை
ஆஹா பொண்ணா வந்தாளாம்

அடி ஆசை மரிக்கொழுந்தே
அத்தை பெத்த மல்லிகையே
மாமன் மனசுக்குள்ள
கப்பல் விடுங்க

அட மீசை முறுக்கிக்கிட்டு
முந்தானையை கட்டிக்கிட்டு
முழுசா விடிஞ்ச பின்னும்
காலில் கெடங்க

அசத்து அசத்து அழகா அசத்து
சமத்து சமத்து இவதான் சமத்து
மெரட்டு மெரட்டு வெரசா வெரட்டு
மெரட்டு மெரட்டு முழுசா மெரட்டு

பட்டுப் பொடவை
பக்கம் சரிய
அடடா கூட்டணிக்கு
வேட்டி வருமே

கல்யாணம் கல்யாணம்
சொர்க்கத்துல கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சூப்பரான கல்யாணம்

கல்யாணம் கல்யாணம்
சொர்க்கத்துல கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்
சூப்பரான கல்யாணம்

சரணம் 1

அடடா அடடா
இந்த ஆம்பளைங்க ஆசையெல்லாம்
அவசர கோலம்

அய்யய்யோ அய்யய்யோ
அடி ஒங்க கிட்ட மாட்டிக்கிட்டா
ஆம்பளை பாவம்

அட எங்க பொண்ணு
மாப்பிள்ளைய
பூவப் போல தாங்குவா

அட எங்க பையன்
கண்ணுக்குள்ள
கண்ணா வச்சி தூங்குவான்

ரெண்டு ஒடம்பு
ஒத்த உசுரு
தெனமும் ராத்திரிக்கு
வேர்த்துக் கொட்டுமே

சரணம் 2

மெதுவா மெதுவா
அட கிட்ட வந்து கெஞ்சுறது
ஆம்பளை வீரம்

பொதுவா பொதுவா
அடி கெஞ்சுறப்போ மிஞ்சுறது
பொம்பளை வீரம்

இஷ்டப்பட்டு வாழுவது
எல்லையில்லா சந்தோசம்
மன்னிக்கிற மனசிருந்தா
வாழ்நாளெல்லாம் கொண்டாட்டம்

பிஞ்சு மனசு
பஞ்சா பறக்க
காதல் நெஞ்சுக்குள்ள
கூடு கட்டுமே,